அமராவதி, திருமூர்த்தி அணைகளில் அமைச்சர் ஆய்வு

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணைகளில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணணாக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணைக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம்  85 அடியைத் தாண்டி சனிக்கிழமை முழுக்  கொள்ளளவை  அடையும் நிலை ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை மாலை அமராவதி அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருமூர்த்தி அணைக்கும் சென்று பார்வையிட்டார். அப்போது அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட வெல்ளப் பெருக்கு குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 
இதையடுத்து உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் மற்றும் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
இதில், வடகிழக்கு பருவ மழையின்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் மழை காலங்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com