வேலையின்மையால் இளைஞர்கள் கோபம்

வேலையின்மையால் நாடு முழுவதும் இளைஞர்கள் வெகுண்டு எழுந்துள்ளனர் என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.


வேலையின்மையால் நாடு முழுவதும் இளைஞர்கள் வெகுண்டு எழுந்துள்ளனர் என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
  திருப்பூர், ராயபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
  காங்கிரஸும், திமுகவும் புதிய அணிகள் அல்ல. மு.கருணாநிதியும்,  இந்திராவும் 1971 ஆம் ஆண்டில் உருவாக்கியது இந்த அணி. காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை உள்ளன. இதில் ஒன்றுதான் மதசார்பின்மை. மத வாரியாக இந்த நாட்டை பிளவுபடுத்தக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளன இந்த இரு அரசியல் கட்சிகள்.
   ஆனால் மற்றொரு புறத்தில் உள்ள அணியில் ஊழலைச் சொன்னவர்களும், ஊழல் செய்தவர்களும் இருக்கின்றனர் ( அதிமுக-பாமக மீது குற்றம் சாட்டினார்). இது மெகா ஊழல் கூட்டணி என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதில் தவறு இல்லை. இந்தக் கூட்டணியைக் கூட மன்னிக்கலாம். ஆனால் பாஜகவுடன் வைத்த கூட்டணியை மன்னிக்க முடியாது.
  பண மதிப்பிழப்பு காரணமாக மட்டுமே தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும்,  5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்ததாகவும் தமிழக தொழில் துறை அமைச்சர் குற்றம் சாட்டினார். ஆனால், அதே அமைச்சர் இன்று தற்போது அவர்களுடன் கூட்டணி சேர்ந்து வரப்போகிறார். கடந்த 45 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக வேலையின்மை அதிகரித்துள்ளது. மோடி அரசு இளைஞர்களை ஏமாற்றியுள்ளது. நாடு முழுவதும் இளைஞர்கள் வெகுண்டு எழுந்துள்ளனர். நாட்டின் சர்வாதிகாரிபோல் பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்.
 இந்தியாவில் ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும் என்றால் வரும் தேர்தலில் காங்கிரஸ்  கூட்டணியை  வெற்றி பெற வேண்டும் என்றார்.
  அகில  இந்திய  காங்கிரஸ்  செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி செயலாளர் மோகன்குமாரமங்கலம், திருப்பூர்  மாநகர்  மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், திருப்பூர் புறநகர்  மாவட்டத் தலைவர் கோபி உள்ளிட் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com