தருமபுரி மாவட்டத்தில் பெருகும் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள்

மாநிலத்தின் பின்தங்கிய தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.

மாநிலத்தின் பின்தங்கிய தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.  இதனைத் தவிர்த்து பெரியளவில் வேலைவாய்ப்புக்கு வழியில்லாததால் கிடைக்கும் வேலையை செய்யும் நிலையில் இளைஞர்கள் இருந்து வந்தனர்.  இந் நிலையில், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 
தீர்க்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடு: மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரைடு (உப்புத்தன்மை) அதிகம் இருப்பதால், இந்த நீரை அருந்துவதன் மூலம் பற்களில் கறை படிதல் மட்டுமல்லாது, பல்வேறு நோய் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வந்தனர்.  இதுபோன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுமார் ரூ. 2,000 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது.  இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சுகாதாரத்துடன் சீரான குடிநீர் விநியோகிக்கப்படுவதால் மக்களின் முக்கிய பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக எல்கையைத் தொடுமிடமான ஒகேனக்கல், மாவட்ட எல்லையில் இருப்பதால் அதிகப்படியான நீர்வரத்து இருக்கும் காலங்களில் உபரிநீரை ஏரிகளுக்குத் திருப்பி விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  இதனை வலியுறுத்தி பாமக சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நடவடிக்கையின் பயனாக, ஒகேனக்கல் அருகே மடம் எனுமிடத்தில் உள்ள ஏரிக்கு உபரிநீரை பம்பிங் மூலம் கொண்டு வந்து அதன்மூலம் மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான ஏரிகளில் நிரப்பும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு, கருத்துரு மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.  
துரித கதியில் சிப்காட் பணிகள்: பன்னாட்டு கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்வதன் மூலம் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அதிகளவில் வரச் செய்வதோடு,  வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தடங்கம் அருகே சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  முதல்கட்டமாக, சுமார் 900 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும்,  எஞ்சிய நிலங்கள் கையகப்படுத்த துரித கதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
தேசிய நெடுஞ்சாலையையொட்டி சிப்காட் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதால் சுமார் 2 மணி நேரத்தில் பெங்களூருக்குச் செல்ல முடிவதோடு,  உற்பத்தி செய்த பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்குக் கொண்டு செல்ல சிரமம் இருக்காது என்பதால், பெரிய தொழிற்சாலை நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தை அமைக்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 
6 வழிச்சாலை திட்டத்துக்கும் திட்டமிடல்:  தருமபுரி வழியாக அதிகப்படியான கார்கள், கனரக வாகனங்கள் கடந்து செல்வதைக் கருத்தில் கொண்டு அதியமான்கோட்டையில் இருந்து ஒசூர் வரையில் 6 வழிச் சாலையாக்கும் திட்டம் செயல்படுத்தும் நோக்கில் மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.  இதற்கு சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது நிலம் பாதிக்கப்படும் என்பதால், எதிர்ப்பை பதிவு செய்திருப்பதால் தற்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர,  பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி பென்னாகரம் சாலையில் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 10 ஏக்கர் நிலம் பெறப்பட்டிருப்பதால், அந்தப் பணியும் விரைவில் தொடங்க வாய்ப்பிருக்கிறது.  இதுபோன்ற காரணங்களால் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளின் பெருக்கம் அதிகரித்து வருவதன் மூலம் நகர விரிவாக்கத்துக்கு மக்கள் தயாராகி விட்டதையே உணர்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com