ஒகேனக்கல் மிகை நீரை ஏரிகளில் நிரப்பத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

ஒகேனக்கல்லில் மழைக் காலங்களில் செல்லும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பத்

ஒகேனக்கல்லில் மழைக் காலங்களில் செல்லும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்பத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
தருமபுரி நகரம், குமாரசாமிபேட்டையில் அதிமுக அமைப்பு தின விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி நகர அதிமுக தலைவர் பி.குருநாதன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அதிமுக பேச்சாளர் குப்பண்ணா விவேகானந்தன் உரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் மிகையாக செல்லும் நீரை, மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்குக் கொண்டு வந்து நிரப்பும் திட்டம் வகுக்கப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில், ஒகேனக்கல்லிலிருந்து கெண்டையன் குட்டை ஏரிக்கு முதலில் தண்ணீர் கொண்டு வரப்படும். இதையடுத்து, அங்கிருந்து 238 ஏரிகளுக்கு நீரை எளிதாக கொண்டு செல்ல இயலும். இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். இவைத் தவிர, எண்ணேகொல்புதூரிலிருந்து தென்பெண்ணை ஆற்று நீரை, தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு வரும் திட்டம், தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மற்றும் ஜெர்த்தலாவ் ஏரிக் கால்வாய்த் திட்டம் ஆகிய 3 திட்டங்களும் மாவட்ட மக்களின் நலன் கருதி, விரைந்து நிறைவேற்றப்படும். மக்களின் தேவைகளை முழுமையாக தமிழக அரசு பூர்த்தி செய்து வருகிறது. ஆனால், தேர்தல் அரசியலுக்காக சிலர் இத் திட்டங்களை நிறைவேற்ற மக்களிடம் கையெழுத்துப் பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு மக்களின் தேவைகளை அறிந்து நலத் திட்டங்களை நிறைவேற்றுகிறது. இத்திட்டங்கள் தங்களால் தான் நிறைவேற்றப்பட்டது எனக் கூறிக் கொள்கின்றனர். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்களை மக்கள் போற்றுகின்றனர். இதை பொருத்துக் கொள்ள இயலாத எதிர்க்கட்சியினர் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என பேசிவருகின்றனர். மக்கள் ஆதரவோடு இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நீடிக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல, அதிமுக மேலும், நூறாண்டு காலம் தமிழகத்தை ஆளும். இக் கட்சியை வீழ்த்த யாராலும் முடியாது என்றார்.
இக் கூட்டத்தில், அதிமுக விவசாய அணித் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com