ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் போராட்டம் தொடரும்: செல்லக்குமார் பேட்டி

ரஃபேல் போர் விமான ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று  அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் செல்லக்குமார் தெரிவித்தார்.

ரஃபேல் போர் விமான ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று  அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் செல்லக்குமார் தெரிவித்தார்.
 தருமபுரியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
ரஃபேல் போர் விமான கொள்முதலில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பான, குற்றச்சாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் என யாரும் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து, விசாரணை நடத்திட அனைத்துக் கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். 
ஒரு விமானத்தின் விலை எவ்வளவு என்பதைத் தெரிவிக்காமல் 9 சதவீதம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ததாகக் கூறுகின்றனர். அதேபோல, மத்திய அரசு நிறுவனத்தில் விமானத்தைத் தயாரிக்காமல், தனியாருக்கு உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். 
அதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பின்னால் தனியார் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் லாபம் ஈட்டவே இந்த விலை ஏற்றம்.
நீர்நிலைகளை முறையாக தூர்வாராததன் விளைவாக மழைக்காலங்களில் ஆறுகளின் உபரிநீர் கடலில் கலக்கிறது. எனவே, விவசாயத்துக்கு பயனளிக்கும் வகையில், அனைத்து நீர்நிலைகளையும் முறையாக தூர்வார வேண்டும்.
7 பேரை விடுவிக்கக் கூடாது: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை விவகாரத்தில், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கக் கோரி, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தவறான முன்னுதாரணம். இதனைக் காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. இந்த முடிவு இந்திய இறையாண்மைக்கு எதிரானது. எனவே, ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com