நாட்டின் இறையாண்மையைக் காத்தவர் கருணாநிதி: ஆ. ராசா

நாட்டின் இறையாண்மையையும், மதச் சார்பின்மையையும் காத்தவர் கருணாநிதி என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா புகழாராம் சூட்டினார்.


நாட்டின் இறையாண்மையையும், மதச் சார்பின்மையையும் காத்தவர் கருணாநிதி என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா புகழாராம் சூட்டினார்.
மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கருணாநிதி உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின் ஆ. ராசா பேசியது:
மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, தத்துவத்தின் தலைவர், இலக்கியத் தலைவர், அரசியல் விற்பன்னர் எனப் பெயர்பெற்று, புகழோடு திகழ்ந்தவர். பிரெஞ்சு நாட்டில் வால்டேர் அளித்துச் சென்ற தத்துவத்தைப் பின்பற்றி, ரூசோ புரட்சி செய்து வெற்றி பெறவும், மார்க்ஸ் அளித்த தத்துவத்தைப் பின்பற்றி லெனின் சோவியத் ரஷியாவில் புரட்சி செய்து வெற்றி பெறவும் அவர்களுக்கு இரு நூற்றாண்டுகள் ஆயின.
ஆனால், பெரியார் உரைத்த தத்துவம், அதே நூற்றாண்டில், அண்ணா, கருணாநிதியால் வென்று உலக சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.
மாமேதை அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் சம பங்களிக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால், அது வெற்றி பெறவில்லை.
இதற்காக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இச் சட்டம், இப்போது தோற்றிருக்கலாம், ஆனால், பின்னாளில் இதனை இயற்ற நிச்சயம் ஒரு தலைவன் வருவான் என்றார். அதனை மெய்ப்பித்து, பெண்களுக்குச் சொத்துரிமை அளித்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி.
எல்லா இலக்கிவாதிகளுக்கும், தனது எழுத்தில் சறுக்கல் வரும். ஆனால், 1950-களில் தொடங்கி இறுதி வரை சறுக்கலின்றி, பிறழாமல் இருந்தது அவருடைய எழுத்து. இந்திய இறையாண்மையைக் காத்தவர் கருணாநிதி என்றார்.
நிகழ்ச்சியில் முனைவர் இளசை சுந்தரம் பேசியது:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நாவன்மை மிக்கவர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு சாதுர்யமாக, உடனுக்குடன் பதிலளித்தவர். பகுத்தறிவு சிந்தனை வளரப் பாடுபட்டவர். இட ஒதுக்கீட்டுக்காகப் போராடி வென்றவர். கருணாநிதி காட்டிய வழியில் இனம், மொழி காத்து புதிய சமுதாயம் படைக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார்.
பேராசிரியர் அப்துல் காதர் பேசியது: ஓரிதழ் தாமரை எப்படி சித்த மருத்துவத்தில் சிறந்ததாகப் போற்றப்படுகிறதோ, அதைப்போல, அரசியலிலே ஓரிதழ் தாமரையாக இருந்து இருளை அகலச் செய்தவர் கருணாநிதி. திராவிட இயக்கத் தத்துவத்தின் வெளிச்சம் உள்ளவரை தற்போது உள்ள மூடு மந்திரங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
முன்னதாக, தருமபுரி திமுக மாவட்டச் செயலர் தடங்கம் பெ. சுப்ரமணி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் வ. முல்லைவேந்தன், முன்னாள் எம்.பி.க்கள் இரா.தாமரைச்செல்வன், இ.ஜி. சுகவனம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com