பனை விதைகளை நடும் பேருந்து நடத்துநர்

மரம் வளர்ப்பில் உள்ள ஆர்வம் காரணமாக தருமபுரியிலுள்ள ஏரிக் கரைகளில் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் தனியார் பேருந்து நடத்துநர்.

மரம் வளர்ப்பில் உள்ள ஆர்வம் காரணமாக தருமபுரியிலுள்ள ஏரிக் கரைகளில் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் தனியார் பேருந்து நடத்துநர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஅள்ளியைச் சேர்ந்தவர் பி.சிவா, தனியார் பேருந்து நடத்துநர். 
ஒரு வாரம் வேலை, மறுவாரம் விடுப்பு என்ற பணிச் சூழலில் இருக்கும் சிவா, விடுப்புக் காலத்தில் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிக்கரைகளில் பனை விதைகளை நடுகிறார்.
ஜக்கசமுத்திரம் அருகேயுள்ள ஒட்டுப்பட்டி ஏரியில் கடந்த வாரம் 800 பனை விதைகளை நடவு செய்திருக்கிறார்.  தொடர்ந்து நல்லம்பள்ளி பகுதியில் லளிகம் செல்லும் வழியிலுள்ள ஏரியில் 300 பனை விதைளை நடவு செய்திருக்கிறார்.  அதனைத் தொடர்ந்து,  அதியமான்கோட்டை அருகேயுள்ள ஏரிக் கரையில் 60 பனை விதைகளை நடவு செய்திருக்கிறார்.
தன்னுடைய வாழ்நாளில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்வதுதான் இலக்கு எனக் கூறும் சிவா,  மேலும் கூறியது:  கடந்த ஆண்டு ஒட்டுப்பட்டி திரெளபதியம்மன் கோயில் இடத்தில் தேக்கு உள்ளிட்ட 400 மரக்கன்றுகளை நட்டு வைத்தேன்.  அவற்றில் பெரும்பாலானவை தற்போது 3 அடி உயரம் வளர்ந்திருக்கின்றன.  அடுத்தக்கட்டமாகத்தான் பனை விதைகளை நடும் பணியைத் தொடங்கினேன்.
அந்தந்தப் பகுதிகளில் பனை விதைகளைச் சேகரித்து, அங்கேயே அவற்றை உரித்து, கொட்டைகளை மட்டும் பிரித்து அப்போதே நடவுப் பணிகளை முடித்து விடுவேன்.  சொந்தமாக நிலம் இல்லை என்றாலும், மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளது.  என்னுடைய வாழ்நாளில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்வதுதான் இலக்கு என்றார் சிவா.
தமிழ் மண்ணின் பாரம்பரியமான பனை மரம்,  மண்ணின் அடி ஆழத்துக்கும் தன்னுடைய வேர் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று நிலத்தடி நீரை வளப்படுத்தும் குணம் கொண்டது.
இத்தனை சிறப்பு மிக்க பனை மரங்களை உருவாக்கும் பணி சிறிதாக இருந்தாலும்,  பல ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பலனைத் தரக்கூடியது.  சிவா போன்ற ஏராளமானோர் தன்னார்வத்துடன் முன்வந்து பனை வளர்ப்பைச் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com