பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தருமபுரி, கிருஷ்ணகிரியில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக தருமபுரி நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக தருமபுரி நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை போகிப் பண்டிகையுடன் தொடங்கியது. இத்திருவிழாவுக்கு, முன்கூட்டியே விடுமுறை கிடைத்ததால், பெங்களூரு,  ஒசூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முன்னதாக தங்களது ஊர்களுக்குத் திரும்பினர். இதனால், புத்தாடைகள்,  பேன்ஸி பொருள்கள், கரும்பு, மஞ்சள் குலை, வாழை ஆகியவற்றை வாங்கவும், பொங்கல் திருவிழாவுக்கு தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் வாங்கவும், விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கயிறு உள்ளிட்ட அலங்கார பொருள்கள் வாங்கிடவும், ஞாயிற்றுக்கிழமை முதலே தருமபுரி நகரில் குவியத் தொடங்கினர். இக்கூட்டம் திங்கள்கிழமை போகிப் பண்டிகையன்று மேலும் அதிகரித்தது. பொதுமக்கள் கூட்டத்தையொட்டி, ஆறுமுக ஆசாரித் தெரு, சின்னசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள நான்கு பிரதான சாலைகள் மற்றும் கடைவீதி, சித்தவீரப்பசெட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் நெரிசல்  காணப்பட்டது. வாடிக்கையாளர்களை கவர, ஜவுளிக் கடைகள், வணிக வளாகங்கள், பரிசு பொருள்கள், சிறப்புத் தள்ளுபடி என பல்வேறு விளம்பரங்கள் மூலம் சிறப்பு விற்பனையில் ஈடுபட்டன. 
இதேபோல, சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைத்து, பேன்ஸி, பொம்மைகள், வண்ணக் கோலப்பொடிகள், மண் பானைகள், வண்ண ஓவியங்களுடன் கூடிய பானைகளும் விற்பனை செய்யப்பட்டன.  இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதேபோல, நகரப் பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கடைகளில் மல்லிகைப்பூ, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பொதுமக்கள் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். பண்டிகையையொட்டி பூக்களின் விலை சற்று அதிகரித்தது. இருப்பினும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச் சென்றனர். பொதுமக்களின் கூட்டத்தையொட்டி,  தருமபுரி நகரில் பொங்கல் பண்டிகை விற்பனை களைகட்டியது. தருமபுரி நகர போலீஸார் மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸார், ஊர்க்காவல் படையினர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கிருஷ்ணகிரியில்... பொங்கல்  பண்டிகையையொட்டி,  கிருஷ்ணகிரியில்  பூஜை பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. 
தமிழர்  திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி,  புதிய பானையில் புத்தரிசியில் பொங்கல் வைத்து,  சூரியனை வழிபடுவது தமிழர்களின் மரபு.  இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் முதல் நாளான திங்கள்கிழமை போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வான பொங்கல் பண்டிகைக்காக, விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் ஏராளமானோர், மண் பானை,  கரும்பு, மஞ்சள் குலை, காப்புக் கட்டு மற்றும் பூஜைக்கான பழம், பூக்கள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதைபோல், காவேரிப்பட்டணம்,  பர்கூர், சூளகிரி, வேப்பனஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கான பூஜை பொருள்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com