விவசாய வருமானத்துக்கும் வரி: செ.நல்லசாமி வலியுறுத்தல்

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் போலி விவசாயிகளை அடையாளம் கண்டு தடுத்திட விவசாய வருமானத்துக்கும்

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் போலி விவசாயிகளை அடையாளம் கண்டு தடுத்திட விவசாய வருமானத்துக்கும் வரி விதிக்க வேண்டும் என்றும் இதைச் செயல்படுத்தும் முன்னர் விவசாய கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி தெரிவித்தார். 
நாமக்கல்லில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி:-
 விவசாய வருமானத்துக்கு வருமான வரி இல்லை என்பதால், கருப்புப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவும் கருவியாக சிலர் விவசாயத்தைப் பயன்படுத்துகின்றனர்.  இதனை தடுக்க விவசாய கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்திவிட்டு,  விவசாய வருமானத்துக்கும் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் சிலரின் முயற்சி தடுக்கப்படும். 
  அரசியல்வாதிகள்,  நடிகர்கள்,  தொழிலதிபர்கள்,  விளையாட்டு வீரர்கள் விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கிறது.  ஆனால், விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட வேறு எந்தத் தொழிலையும் அறிந்திராத விவசாயிகளுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்படுகிறது. 
 கால்நடைகளுக்கு தடுப்பூசி: தற்போது கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.  கஜா புயலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழல் மாற்றத்தால் இந்த நோய் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.  இதனால் அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசியை உடனடியாக போட வேண்டும். 
மழைக் காலத்தில் இந்த நோய் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதால், வரும் காலத்தில் ஆகஸ்ட் மாதத்திலேயே கோமாரி நோய் தடுப்பூசி போட நடவடிக்கையெடுக்க வேண்டும்.
நிகழாண்டில் தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளுக்கும் நோய்த் தாக்குதல் உள்ளது.  இதனால் இனிவரும் காலங்களில் தரமான தடுப்பூசிகளைப் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், கோமாரி நோய் கட்டுக்குள் வரும் வரை மாட்டுச் சந்தைகள் கூடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். 
வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்:
   காற்று மாசுபாட்டைத் தடுக்க வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.  எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.  பட்டாசு வெடிக்க நிபந்தனை விதித்ததை வரவேற்கிறோம்.  அதே சமயத்தில் இந்தத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாற்றுத் தொழில் வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 
ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனை கூடாது எனக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது.  இதனை வரவேற்கிறோம்.  மரண தண்டனை இல்லை என்றால் குற்றங்கள் அதிகரிக்கும். 
கள் இறக்க அனுமதி தேவை: கள் இறக்க அனுமதி,  நீரா இறக்க, விற்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் பரப்புரை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.  வரும் 17 ஆம் தேதி காலை கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு தொடங்கும் இந்தப் பயணம், திருப்பூர், ஈரோடு, சேலம், அரூர், திருவண்ணாமலை,  வேலூர் வழியாகச் சென்று 19-ஆம் தேதி இரவு சென்னையில் நிறைவடைகிறது.  அன்று இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com