சொத்துகளை ஏமாற்றியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் தீக்குளிப்பு

சொத்துகளை ஏமாற்றியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் புதன்கிழமை குமாரபாளையம் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

சொத்துகளை ஏமாற்றியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் புதன்கிழமை குமாரபாளையம் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
குமாரபாளையத்தை அடுத்த  ஓலப்பாளையம், காந்திநகர், வாய்க்கால்கரையைச் சேர்ந்தவர் சேகர் மனைவி பார்வதி (46). இவர், கடந்த  2015-ஆம் ஆண்டு கோவை பீளமேட்டில் ஜவுளிக் கடை வைத்திருந்தாரம். அப்போது, குமாரபாளையம், சுந்தரம்  நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் அறிமுகமாகி நெருக்கமாகியுள்ளார். இதனால், பார்வதியின் கணவர் சேகர், தனது மகனுடன் பிரிந்து சென்றார்.
இந்நிலையில், பார்வதியும், ஈஸ்வரனும் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பார்வதியின் ஜவுளிக் கடையிலிருந்து ரூ.98 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஜவுளிகளை குமாரபாளையம் பகுதியில் ஈஸ்வரன் விற்பனை  செய்துவிட்டாராம். மேலும், 2016-இல் குமாரபாளையம் பகுதியில் 48 சென்ட் நிலத்தை இருவரும் சேர்ந்து வாங்கியுள்ளனர். 
இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனராம்.  இதனால், 34 சென்ட் நிலத்தை திருபிக்க் கொடுத்த ஈஸ்வரன்,  மீதமுள்ள 14 சென்ட் நிலத்தை கொடுக்கவில்லையாம்.  மேலும், பார்வதியிடம் இருந்து கார், இருசக்கர வாகனம், குளிர்சாதன இயந்திரம், கணினி  உள்பட ரூ.1.30 கோடி மதிப்பிலான உடமைகளையும் திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது சொத்து மற்றும் உடமைகளை மீட்டுத் தரக் கோரி,  கடந்த ஜூலை மாதம் பார்வதி அளித்த புகாரின் பேரில்,  உரிய விசாரணை நடத்துமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த  செப். 9-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த குமாரபாளையம் போலீஸார், பார்வதியை ஏமாற்றியதாக  குமாரபாளையம் ராஜாஜி நகரைச் சேர்ந்த தேவராஜ் மகன் ஈஸ்வரன் (42),  அவரது மனைவி மலர்க்கொடி  (31), ஈஸ்வரனின் சகோதரர் ஜம்பு (44) ஆகியோரை தேடி வந்தனர். 
இந் நிலையில், புதன்கிழமை மாலை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு வந்த பார்வதி,  தன்னை  ஏமாற்றியோர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூச்சலிட்டபடி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு காவல்  நிலையத்துக்குள் நுழைய முயன்றார். 
உடலில் தீ கொளுந்துவிட்டு எரிவதைக்  கண்ட பொதுமக்கள் மற்றும் போலீஸார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.  இதையடுத்து, பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பார்வதி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com