காங்கிரஸ், திமுகவுக்கு எதிரான அதிமுகவின் போராட்டம் அவசியமானதுதான்

காங்கிரஸ், திமுக கட்சிகளை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என வரும் 25-ஆம் தேதி 

காங்கிரஸ், திமுக கட்சிகளை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என வரும் 25-ஆம் தேதி அதிமுக நடத்தும் போராட்டம் அவசியமானதுதான் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை மாலை அளித்த பேட்டி:
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் எஸ்.சி. பிரிவில் சேர்க்கப்பட்டதால், கடந்த 90 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் இந்த சமுதாய மக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டுவிட்டது. இதனால் தேவேந்திர வேளாளர் சமுதாயத்தை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கருணாஸ் தான் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற மாண்பை மறந்து விட்டு பேசியிருக்கிறார். அவர் தானாக பேசவில்லை, யாரோ அவரை பேச வைத்துள்ளனர். கருணாஸ் மட்டுமல்லாது, அவரை பேச தூண்டியவர்கள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்றே மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இந்திய அரசு உதவியதாக அப்போது அதிபராக இருந்த ராஜபட்ச இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையில் பல லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு உதவி செய்த அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், அந்த அரசில் அங்கம் வகித்த திமுகவும் பதில் சொல்லியே ஆக வேண்டும். 
இலங்கை அரசுக்கு உதவியதாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என வரும் 25-ஆம் தேதி அதிமுக நடத்தும் போராட்டம் அவசியமானது. ராஜபட்சவை எப்படி சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறுகிறோமோ, அதுபோல இலங்கை அரசுக்கு உதவிய காங்கிரஸ், திமுக இரண்டுமே சர்வதேச போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஊழல் என்பது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊறிப்போன விஷயம். இப்போது ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கும் திமுக, அடிப்படை ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுக்காமல் வெளியில் தெரிவிப்பது என்பது ஆட்சியாளர்களை எப்படியாவது பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் மூன்றாம் தர அரசியல்.
மத்தியில் ஆட்சியில் உள்ள தேசியக் கட்சியின் செயலராக உள்ள ஹெச். ராஜா பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக கடுமையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com