பள்ளிபாளையத்தில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த 4 பேர் கைது

பள்ளிபாளையத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

பள்ளிபாளையத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
 நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார்(43).  கடந்த 8 ஆண்டுகளாக பிவிசி குழாய் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்த இவர், தொழிலில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்து, தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளார். 
 சுகுமார் தனது நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் வேலை செய்ததற்காக ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் ( 28) என்பவருக்கு தர வேண்டிய ரூ.80,000-த்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 
 இந்த நிலையில்,  வெள்ளிக்கிழமை காலை பணத்தைக் கேட்டு சுகுமார் வீட்டுக்கு ரமேஷ் சென்றுள்ளார்.  அப்போது அங்கு அசல் 100 ரூபாய் தாளை ஸ்கேன் செய்து,  கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்ததைப் பார்த்துள்ளார்.  மேலும், ரமேஷுக்கு தர வேண்டியப் பணத்துக்கு ஏற்கெனவே அச்சடித்து வைத்துள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை சுகுமார் கொடுத்துள்ளார்.  இதனை வாங்க மறுத்த ரமேஷ், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 உடனடியாக பாப்பம்பாளையம் பாரதி நகரில் உள்ள சுகுமார் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் வி.பாலமுருகன்,  உதவிக் காவல் ஆய்வாளர் பி.வெற்றிவேல் ஆகியோர் வீட்டில் சோதனையிட்டனர்.  அப்போது அங்கு 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வைக்கப்பட்டிருந்தன.  இதையடுத்து,  வீட்டில் இருந்த சுகுமார் உள்ளிட்ட 4 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். 
 விசாரணையில்,  தொழிலில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கடனில் தவித்த சுகுமார்,  தான் டீ குடிக்கச் செல்லும் பள்ளிபாளையம் கண்டிபுதூர் பஜனை மடத் தெருவைச் சேர்ந்த டீக் கடை உரிமையாளரான நாகூர் பானு (33) என்பவரிடம் கடனை அடைக்க ஆலோசனை கேட்டாராம். 
 அவர் தெரிவித்த ஆலோசனையின்படியே சுகுமார் வீட்டில் வைத்து கள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கத் திட்டமிட்டு,  வியாழக்கிழமை காலை முதல் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தொடங்கியுள்ளனர்.  ஆலாம்பாளையம் பொன்னி நகரைச் சேர்ந்த ரமேஷ் (31),  ஆவாரங்காடு காந்திபுரம் முதல் வீதியைச் சேர்ந்த சக்தி என்ற சந்திரசேகரன்(22) ஆகியோர் இதற்கு உதவியாக இருந்தது தெரியவந்தது.  மேலும் 4 பேருக்குமே கடன் பிரச்னை இருந்ததால்,  கடனை அடைக்க கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.   அச்சடிக்கப்பட்ட 100 ரூபாய் கள்ள நோட்டுகள், அச்சடிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரம்,  தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார்,  4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com