கொல்லிமலை அட்மா திட்டத்தில் மிளகுப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி

கொல்லிமலை பகுதியில் வாசலூர்ப்பட்டி, வாழவந்திநாடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)., திட்டப்பணியான


கொல்லிமலை பகுதியில் வாசலூர்ப்பட்டி, வாழவந்திநாடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)., திட்டப்பணியான பண்ணைப்பள்ளியில் தோட்டக்கலைத் துறையின் மூலம் மிளகுப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் மிளகு வாடல் நோய் மேலாண்மை செயல் விளக்க பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
தோட்டக்கலைத் துறையின் உதவி இயக்குநர் ஜெ.ரவிச்சந்திரன், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி புஷ்பநாதன் ஆகியோர் பண்ணைப் பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மிளகு பயிரில் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் செயல் விளக்க மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கினர். 
மிளகுப் பயிரைத் தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும்.  இது ஒரு வகை பூசண நோய்.  முதலில் இலையின் முனையிலிருந்து வாடத் தொடங்கும்.  நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும்.  இது  ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவக் காற்று மழையினால் அதிகம் பரவுகின்றது.  நோய் தாக்கிய 10 அல்லது 15 நாள்களுக்குள் மிளகுக்  கொடி இலை அனைத்தும் உதிர்ந்து இறந்துவிடும்.  தூர் பாகத்திற்கு மிக அருகில் இருக்கும் தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளில் கருமையாக மாறிவிடும்.  தூர் பாகம் முதலில் அழுக ஆரம்பித்து பின் வேர்பாகம்  முழுவதும் அழுகி செடி இறந்துவிடும்.
மேலாண்மை முறைகள்
மழைக் காலத்தில் இந் நோய் வேகமாகப் பரவுவதால், நல்ல வடிகால் வசதி செய்து,  நோயின் தாக்கத்ததைக் குறைக்கலாம்.  நாற்றங்காலில் ஒரு கிலோ மண் கலவைக்கு 1 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து பிறகு நட வேண்டும்.  கொடி ஒன்றுக்கு அரைக் கிலோ  வேப்பம் பிண்ணாக்கு இடவேண்டும்.  இலை வழியாக ஒரு சதவிகித சூடோமோனோஸ் புளுரசன்ஸ் அளிக்க வேண்டும்.
தடுப்பு முறை : நாற்றங்காலில்  ஒரு கிலோ மண் கலவைக்கு 1 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் கலந்து விடவேண்டும்.  நடவு வயலில் வேப்பம் பிண்ணாக்கு அரை கிலோ, போர்டாக்ஸ் கலவையை செடியின் அடிப்பாகத்திலிருந்து 1 மீட்டர் உயரம் வரை பூச வேண்டும்.  செடிக்கு டிரைக்கோடெர்மா விரிடி  20 கிராம்,  தொழு  உரம் 50 கிலோ என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும் என விளக்கிக் கூறினர். 
மேலும்,  துணை தோட்டக் கலை அலுவலர் சுப்பரமணி,  உதவி தோட்டக் கலை அலுவலர்கள் மகேந்திரன்,  பிரதீப்குமார், மாரிசெல்வன், வெங்கடேசன் ஆகியோர் மானியத் திட்டங்கள், மலைப் பயிர்கள் இனத்தின் கீழ் மரக்கன்றுகள் விநியோகம்,  மத்திய,  மாநில திட்டங்கள் குறித்து  விளக்கமளித்தனர்.  அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மா.ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர், கவிசங்கர் ஆகியோர் அட்மா திட்டப் பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு
விளக்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com