நாமக்கல் ஆவின் ஒன்றியத்தில் 2.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு: மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்லில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ஆவின் ஒன்றியத்தில்,  பால் கொள்முதல் 1.50 லட்சம் லிட்டர் என்பதை 2.50 லட்சம் லிட்டராக  உயர்த்த வேண்டும் என அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.


நாமக்கல்லில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ஆவின் ஒன்றியத்தில்,  பால் கொள்முதல் 1.50 லட்சம் லிட்டர் என்பதை 2.50 லட்சம் லிட்டராக  உயர்த்த வேண்டும் என அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது, கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய ஒன்றியமாக நாமக்கல் உருவாக்கப்பட்டது.  இங்குள்ள 492 கூட்டுறவு சங்கங்களில், 1.12 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  தற்போதைய நிலையில் 17,260 பேர், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி வருகின்றனர்.  மாவட்டத்தில் நாமக்கல், பரமத்திவேலூரில் உள்ள  பால் குளிரூட்டும் நிலையங்களில் 50 ஆயிரம் லிட்டர் பாலும்,  10 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களில் 30 ஆயிரம் லிட்டர் பாலும் குளிர்விக்கப்படுகின்றன.  மீதமுள்ளவை சேலம் ஆவின் ஒன்றியத்துக்கு அனுப்பப்படுகிறது.  நாமக்கல் ஆவின் ஒன்றிய பால் பண்ணையின் வசதிக்காக, நாமக்கல்-பரமத்தி சாலையில் நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது.  இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தலைமை வகித்தார்.  சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா,  மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம்,  சட்டமன்ற உறுப்பினர்கள்  கே.பி.பி.பாஸ்கர்,  சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி புதிய நிர்வாக அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசியது;  திருப்பூர், நாமக்கல்லில் புதிய ஆவின் ஒன்றியத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.  சேலம் ஆவின் ஒன்றியத்தில் இருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டுள்ளது.  தற்போது 1.50 லட்சம் லிட்டர் வரையில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.  இதனை 2.50 லட்சமாக உயர்த்த வேண்டும். ஆவின் ஒன்றியத்திற்கும், அத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர்(ஆவின் ஒன்றியம்) ப.குமரேஸ்வரன், சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன்,  நாமக்கல் ஆவின் தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஏ.சுப்பிரமணியன், நாமக்கல் துணைப் பதிவாளர்(பால்வளம்)  க.சந்திரசேகரராஜா உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com