ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ரூ.200 நோட்டுகளை செலுத்த முடியாததால் வாடிக்கையாளர்கள் அவதி

வங்கிகளின் வாசலில் கால்கடுக்க காத்திருந்த நிலையை மாற்றி,  பணம் செலுத்துவதையும், பெறுவதையும் எளிதாக்கியுள்ளது

வங்கிகளின் வாசலில் கால்கடுக்க காத்திருந்த நிலையை மாற்றி,  பணம் செலுத்துவதையும், பெறுவதையும் எளிதாக்கியுள்ளது கையடக்க இணையதள சேவை.  பணப் பரிமாற்றம் எளிதாகப்பட வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு ரூ.500,  ரூ.1,000  நோட்டுகளை திரும்பப் பெற்றது. 
அதற்குப் பின்னர்  ரூ.2 ஆயிரம்,  500,  200,  100, 50 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.  "நெட் பேங்கிங்' முறையை படித்தோர் எளிதாக்கிக் கொள்ள முடியும். ஆனால், பாமரர்கள், வங்கி முன்பாகவும், ஏடிஎம் இயந்திரங்கள் முன்பாகவும் வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. 
நேரடியாக வங்கியில் பணம் செலுத்தச் சென்றாலும், ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்துங்கள் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.  அங்கு பணம் செலுத்த செல்லும் பலரும் ரூ. 2 ஆயிரம்,  ரூ.500 நோட்டுகளை எடுத்துக் கொள்ளும் ஏடிஎம் இயந்திரங்கள்  ரூ. 200 நோட்டுகளை மட்டும் வெளியே தள்ளிவிடுகிறது என்று கூறுகின்றனர்.  ரூ.100  ஏற்றுக்கொள்ளும் இயந்திரங்கள் ரூ. 200 நோட்டுகளை மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என வாடிக்கையாளர்கள் பலரும் கேட்டுக் கொள்கின்றனர்.
இதனால் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் செலுத்த விரும்புவோர்,  தங்களிடமுள்ள ரூ.200 நோட்டுகளை மாற்றுவதற்காக அலைய வேண்டிய நிலை உள்ளது.  இதனால் தேவையற்ற மனவேதனைக்கு ஆளாகின்றனர். 
இதுகுறித்து இந்தியன் வங்கி மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது;  பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் பழைய இயந்திரங்களாகும்.   ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். அதனால் ரூபாய் நோட்டுகளில், பேனா, பென்சில் கொண்டு எழுதியிருந்தால் ஏற்றுக் கொள்ளாது.  ரூ.200 நோட்டுகளை பொருத்தவரை, அதற்குரிய மென்பொருள் ஏடிஎம் இயந்திரங்களில் பொருத்தப்படவில்லை.  இதுகுறித்து ரிசர்வ் வங்கித் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்  கோரி  வங்கிகள் சார்பில் பரிந்துரைத்துள்ளோம்.  ஏடிஎம் இயந்திரம் மூலமாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் செல்வோர், ரூ.200 நோட்டுகளை எடுத்துச் செல்லாமல், ரூ.100 நோட்டுகளாக எடுத்துச் செல்லுங்கள் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com