கூடுதல் ரயில் இயக்கம்: நாமக்கல் பயணிகள் எதிர்பார்ப்பு

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக பகலில் அதிகளவிலான ரயில்கள் இயக்கப்படும் சூழலில், நாமக்கல்

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக பகலில் அதிகளவிலான ரயில்கள் இயக்கப்படும் சூழலில், நாமக்கல் வழியாக ஓரிரு ரயில்களையாவது இயக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல ஆண்டுகள் போராட்டத்துப் பிறகு,  மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் ரயில் நிலையம் உருவானது. விவசாயம், லாரி, கோழித்தொழிலில் கொடிகட்டி விளங்கும் இந்த மாவட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் சுவாமியை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது, பெங்களூரு-நாகர்கோவில், சென்னை-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இரவில், நாமக்கல் வழியாக செல்கிறது. காலையில், சேலம்-கரூர் பயணிகள் ரயில் செல்கிறது. வார நாள்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் தவிர ராமேஸ்வரம், திருநெல்வேலி செல்லும் சில ரயில்களும், சரக்கு ரயில்களும் வந்து செல்கின்றன. காலை 9 மணிக்கு பின் இரவு 11 மணி வரையில் பெரும்பாலும் நாமக்கல் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வருகை இல்லை. ரயில்கள் வருகை குறித்த அறிவிப்பு பலகை நுழைவாயில் பகுதியில் பொருத்தப்படவில்லை.
இதனால், நாமக்கல் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேருந்து பயணத்தை நாடி செல்கின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் பாதுகாப்பு வசதி குறைவாக இருப்பதாகவும், உணவுப் பொருள்கள் கிடைப்பது அரிதாக உள்ளதாகவும், கழிவறைகளுக்கு பூட்டுப் போட்டிருப்பதும், ரயில் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்கு போதிய போக்குவரத்து வசதியில்லாததாலும் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 
சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஓரிரு ரயில்களை, நாமக்கல் வழியாக இயக்கினால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும். மாவட்ட தலைநகராக இருந்தபோதும், நாமக்கல்லுக்கு போதிய ரயில்கள் இயக்கம் இல்லாததும், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் பயணிகளை விரக்திக்குள்ளாக்குகிறது. 
இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே பொதுமேலாளர் யு.சுப்பாராவ் கூறியது: நாமக்கல் வழியாக பகலில் கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து எவ்வித கருத்துரும் இல்லை. ரயில்கள் வருகை தொடர்பான அறிவிப்புப் பலகை, தற்போது கரூர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. அங்கு பணிகள் முடிவடைந்ததும், நாமக்கல்லில் தொடங்கும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குரிய முயற்சி எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com