மக்களவைத் தேர்தலில் துரோகிகளை முதல் எதிரியாக நினைத்து செயல்பட வேண்டும்:  அமைச்சர் பி.தங்கமணி

மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க.தொண்டர்கள் எதிரியை விட, துரோகிகளைத் தான் முதல் எதிரியாக நினைத்து செயல்பட வேண்டும் என்றார் அமைச்சர் பி.தங்கமணி.

மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க.தொண்டர்கள் எதிரியை விட, துரோகிகளைத் தான் முதல் எதிரியாக நினைத்து செயல்பட வேண்டும் என்றார் அமைச்சர் பி.தங்கமணி.
நாமக்கல் மக்களவைத்  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன் அறிமுகக் கூட்டம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி.  தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.தங்கமணி, வேட்பாளர் பி.காளியப்பனை அறிமுகம் செய்து மேலும் பேசியது:
தமிழகத்தில் ஊடகங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக உள்ளன. இதனால் தொண்டர்கள் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அ.தி.மு.க. கட்சி எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் இருக்கும் என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா குறிப்பிட்டார். 
ஆனால் யாரையும் அவர் அடையாளம் கட்டவில்லை. இந்த இயக்கத்தில் இருக்கும் சாதாரண தொண்டன் கூட இயக்கத்தை நடத்துவான் என்று நினைத்து ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார்.  அதன்படி தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையேற்று சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சிக்கு அங்கீகாரம் தான் நடைபெறும் மக்களவைத் தேர்தல். ஜெயலலிதா இல்லாத தேர்தலில் அதிமுகவினரால் வாக்குகளை அள்ளி குவிக்க முடியாது என எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். ஆனால் பலமான கூட்டணி அமைத்துள்ளோம். 
நாட்டின் பிரதமராக மோடி வரவேண்டும். நாட்டுக்கு வலிமையான தலைவர் வேண்டும். நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என சொல்கிறோம். சிறுபான்மையினரை காக்கும் அரசு அ.தி.மு.க. என எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.வில் ஸ்டாலினை தவிர, காங்கிரஸ் கட்சியினர் கூட,  யார் பிரதமர் வேட்பாளர் என இதுவரை சொல்லவில்லை.
நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டுமென்றால் தலைமை வலிமையாக இருக்க வேண்டும். அதனால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதன் மூலம் தமிழக உரிமையை கேட்டுப்பெற முடியும். கடந்த மக்களவைத் தேர்தலில் 37 பேர்  வெற்றி பெற்ற காரணத்தால் தான் காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ய முடிந்தது.  இது போல் உரிமைகளை பெறவதற்கு நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் சாதிக்க முடியும். ஆனால் தி.மு.க.வும், காங்கிரசும் 10 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் இருந்தார்கள். அவர்கள் காவிரி பிரச்னைக்கு எதுவும் செய்யவில்லை. எனவே மக்கள் சிந்தித்து நாட்டுக்கு உழைப்பவர்கள் யார், நாட்டை சுரண்டுபவர்கள் யார் என பார்த்து வாக்களிக்க வேண்டும். 
இந்தத் தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். துரோகிகள் இனி தேர்தலில் நிற்கக் கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். எதிரியை விட, துரோகிகளைத் தான் முதல் எதிரியாக பார்க்க வேண்டும். ஒவ்வொரு அ.திமு.க. தொண்டனும்,  துரோகியை முதல் எதிரியாக நினைத்து பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com