அரசின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும்: அமைச்சர் பி.தங்கமணி

அ.தி.மு.க.வை வீழ்த்தவும்,  பிளவுப்படுத்தவும் வரும் தேர்தலைப் பயன்படுத்த நினைக்கும் துரோகிகள்,  எதிரிகளின்

அ.தி.மு.க.வை வீழ்த்தவும்,  பிளவுப்படுத்தவும் வரும் தேர்தலைப் பயன்படுத்த நினைக்கும் துரோகிகள்,  எதிரிகளின் முயற்சி தோல்வியைத் தழுவும் வகையில் அ.தி.மு.க.வினர் அரசின் சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என மாநில மின்சாரம், மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கேட்டுக் கொண்டார். 
ஈரோடு மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு (எ) ஜி.மணிமாறனை குமாரபாளையத்தில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் பி.தங்கமணி பேசியது:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள், கட்சியினர் எளிதில் சந்திக்கும் சாமானியர்களின் முதல்வராக உள்ளார். தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. 
தற்போது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்து விட்டோம் எனக் கவனக்குறைவாக செயல்படக் கூடாது. துரோகிகளும், எதிர்க்கட்சிகளும் அதிமுகவை வீழ்த்தவும், பிளவுப்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் மனங்களில் அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அதனை நினைவு கூர்ந்து வாக்குச்சேகரிப்பில் ஈடுபட வேண்டும். 
குமாரபாளையம் நகருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விசைத்தறித் தொழிலுக்கு ஆதாரமான சாயத்தொழிலைப் பாதுகாக்கும் வகையில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த இடம் தேர்வு முடிவடைந்துள்ளது. விரைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பால் கரையோரத்தில் துணி துவைக்கவும், குளிக்கவும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, கழிவுநீர் செல்ல தனியாக கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தமிழகமெங்கும் பொதுப்பணித் துறை மூலம் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும். அ.தி.மு.க. தன்னலமின்றி பாடுபடும் விசுவாசமிக்க தொண்டர்களைக் கொண்ட கட்சி. ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகள் குமாரபாளையம் தொகுதி பெற்று முதலிடம் பெறும் வகையில் பாடுபட வேண்டும் என்றார். 
குமாரபாளையம் நகரச் செயலர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, நிர்வாகிகள் பி.இ.புருஷோத்தமன், ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com