கொள்முதலுக்கு வந்த நெல் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை

நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட நெல், மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட நெல், மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் இருபோக நெல் சாகுபடி பகுதிகளான வாடிப்பட்டி, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு வட்டங்களில் முதல்போக அறுவடை முடிந்துவிட்டது. விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், மிகவும் தாமதமாக நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
மேற்குறிப்பிட்ட 3 வட்டங்களுக்கும் 12 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த சில நாள்களாக, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் பெய்த மழையில் கொள்முதலுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்தன. மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை தொடர்ந்து மழை பெய்ததால், தார் பாய்களைப் போட்டு முழுமையாக பாதுகாக்க முடியவில்லை. இதுஒருபுறம் இருக்க, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் வாடிபட்டி பகுதியில் நெற் பயிர்கள் சாய்ந்து விழுந்தன. 
இதுகுறித்து வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி சீதாராமன் கூறியது: மழை தொடங்கிவிட்டால் அறுவடை செய்த நெல்லைப் பாதுகாக்க முடியாது என்பதால், விரைவில் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினோம். இருப்பினும் மிகவும் தாமதமாகவே நெல்கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் தொடங்கினர். 
 வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி, மேட்டுநீரேத்தான் மையங்களில் வியாழக்கிழமை வரை கொள்முதல் செய்யப்பட்டது. இவற்றைநுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளுக்கு எடுத்துச் செல்லாததால் மழையில் நனைந்துவிட்டன. ஏற்கெனவே கொள்முதல் செய்திருந்தாலும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் தவிர்த்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. அதேபோல, கொள்முதலுக்கு கொண்டு வந்த நெல்லும் நனைந்துவிட்டது. ஆகவே, விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com