"கஜா' புயல்: பயிர் சேதங்களை கணக்கிடும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு

கஜா புயல் காரணமாக, மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறையினர்

கஜா புயல் காரணமாக, மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த பகுதிகளை ஆட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
      மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் மரங்கள்  வேரோடு சாய்ந்து விழுந்தன. 
மின்கம்பங்களும் சாய்ந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிசைகள் சேதமடைந்தன.
    இதையடுத்து, மதுரை மாநகராட்சி, வருவாய், பொதுப்பணி, மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புப் படையினர் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தினர். பெரும்பாலான இடங்களில் சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.  அதேபோல், சாய்ந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு, மின்விநியோகம் சீர்படுத்தப்பட்டது.
    மாவட்டத்தில் வாடிப்பட்டி,  அலங்காநல்லூர், மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களும் சேதமடைந்தன. மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் மழையால்  நெல், கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளன.
    மதுரை மாவட்டத்தில் பயிர் சேதம் சுமார் 300 ஏக்கருக்குள் இருக்கும் என்றும், இருப்பினும்  ஆய்வு முடிந்த பிறகே முழுமையான விவரம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
    மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளைப் பொருத்தவரை நெல், செங்கரும்பு அதிகளவில் சேதமடைந்துள்ளன. இப் பகுதியில் நெற் பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. 
இதனால், மழை நின்றவுடன் மீண்டும் முளைத்துவிடும் என்பதால் பாதிப்பு இருக்காது.  கீழையூர், கீழவளவு பகுதிகளில் செங்கரும்புகள் சாய்ந்துள்ளன. அவற்றை சேர்த்து நிறுத்திக் கட்டினால்,  சேதம் இருக்காது. முறிந்த கரும்புகள்தான் விவசாயிகளுக்குப் பாதிப்பாக இருக்கும்.
    பயிர் சேதம் குறித்து தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். 
    வாடிப்பட்டி வட்டம் மேட்டுநீரேத்தான், மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி, புலிப்பட்டி, கொட்டாம்பட்டி அருகே உள்ள எட்டிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் சனிக்கிழமை பார்வையிட்டார். வேளாண் இணை இயக்குநர் குமாரவடிவேல் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
    பின்னர், மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் கூறியது: 
 கஜா புயலால் ஏற்பட்ட மழை காரணமாக, மதுரை மாவட்டத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை. ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. 
    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 28 குடிசை வீடுகள் பகுதி அளவிலும், 20 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 
அவற்றுக்கு உரிய நிவாரணத் தொகை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com