விரகனூர், அனுப்பானடி பகுதிகளில் அடிப்படை வசதிகள்மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை விரகனூர், அனுப்பானடி பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக

மதுரை விரகனூர், அனுப்பானடி பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் மற்றும் அதனைச் சுற்றி உள்ள விரகனூர், அனுப்பானடி, காமராஜர் சாலை, அண்ணாநகர், பங்கஜம் காலனி ஆகிய பகுதிகளில் குடியிருப்போர் பயன்பெறும் வகையில் பூங்காக்கள், விளையாட்டு மைதானம் எதுவும் இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் காலி இடங்கள் மற்றும் தெப்பக்குளம் அருகே உள்ள காலி இடங்களில் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து  உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து பொது நல மனுவாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.  
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தெப்பகுளம் மாரியம்மன் கோயில் வாகன காப்பகத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்தும், விரகனூர், அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர்,  மாநகராட்சி ஆணையர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com