ஆதிதிராவிடர்களுக்காக கையகப்படுத்திய நிலத்தை தனிநபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய இடைக்காலத்தடை

மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுக்குளத்தில் ஆதிதிராவிடர் நலச்சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட நிலத்தை ஆதிதிராவிடர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுக்குளத்தில் ஆதிதிராவிடர் நலச்சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட நிலத்தை ஆதிதிராவிடர்கள் அல்லாதவர்கள், தனி நபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூர் ஆட்டுகுளத்தைச் சேர்ந்த நாகராஜன்,  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தில் ஆதிதிராவிட குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் வழங்குவதற்காக ஆதிதிராவிடர்கள் நலச்சட்டப்படி 9.50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 
அந்த நிலம் வருவாய் ஆவணங்களில் ஆதிதிராவிடர்கள் நத்தம் என மாற்றம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் ஆதிதிராவிடர் குடும்பம்  ஒன்றுக்கு 3 சென்ட் வீதம்  நிலம் வழங்கப்பட்டது.  இதில் ஆதிதிராவிடர்கள் அல்லாதவர்களுக்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடமும் வழங்கப்பட்டுள்ளது.
 ஏற்கெனவே சொந்தமாக வீடு உள்ளவர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆதிராவிடர்கள் நலச் சட்டத்துக்கு எதிரானது.
மேலும் கையகப்படுத்திய இடத்தில் ஒதுக்கீடு செய்யப்படாமல் பல இடங்கள் உள்ளன. தவறாக ஒதுக்கீடு பெற்ற பலரது இடங்களும் காலியாகவே உள்ளன. 
இதனால் காலியிடங்களை நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு பல மனுக்கள் அனுப்பியும் பலனில்லை.
இந்நிலையில் ஒதுக்கீடு செய்யப்படாத இடங்களை ஆதிதிராவிடர் அல்லாதவர்களுக்கும், தனி நபர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீஸார் உதவியுடன் நில அளவீடு நடைபெற்று வருகிறது.
எனவே ஆட்டுக்குளத்தில் ஆதிதிராவிடர் நலச்சட்டத்தின் கீழ் கைகப்பற்றப்பட்ட நிலத்தை ஆதிதிராவிடர்கள் அல்லாதவர்கள், தனிநபர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தடை விதித்தும், காலியிடங்களை நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன்,  பி,டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆதி திராவிடர்கள் அல்லாதவர்கள், தனி நபர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதித்து விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com