நிலையூர் கண்மாய் 7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டத்தின் பெரிய கண்மாயான  நிலையூர் கண்மாய் 7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

மதுரை மாவட்டத்தின் பெரிய கண்மாயான  நிலையூர் கண்மாய் 7 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.    
இக் கண்மாய் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்த காரணத்தால் கண்மாய்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக பெய்யும் தொடர் மழை காரணமாக திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள குறுக்கிட்டான், பானாங்குளம், செவந்திகுளம், சேமட்டான் குளம், ஆரியங்குளம் ஆகிய கண்மாய்கள் நிறைந்தன. இதைத் தொடர்ந்து நிலையூர் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து காணப்பட்டது. இதையடுத்து சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் நிலையூர் கண்மாய் நிறைந்து முழுகொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. மறுகால் பாயும் தண்ணீரானது திருமங்கலம் பகுதிக்கு செல்கிறது.       
நிலையூர் கண்மாயில் கூடுதலாக தண்ணீர் தேக்க கோரிக்கை: இக் கண்மாயில் கூடுதலாக நீரைச் சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வடிவேலன் கூறியது: நிலையூர் கண்மாய்  7 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நிறைந்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு இருபோகம் நெல் சாகுபடி செய்ய உள்ளோம். தற்போது கண்மாய் பெருகி மறுகால் செல்கிறது. அதேசமயத்தில் சின்னமடை வழியாக மறுகால் செல்லும் தண்ணீர் ஒத்த ஆலங்குளம், பெரிய ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லாது. பெரியமடை வழியாக செல்லும் தண்ணீரே இந்த ஊர்களுக்கு செல்லும். எனவே கண்மாயில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றார்.  
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியது: நிலையூர் கண்மாய் சாத்தையாறு அணையைக் காட்டிலும் 7 மடங்கு பெரியது. இங்கு இயற்கையாகவே மன்னர் காலத்திலிருந்து 3 வழிகளில் தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  
முதற்கட்டமாக சிறிய மடையில் மறுகால் பாயும் வகையிலும், இரண்டாவது, மூன்றாவது கட்டங்களாக பெரிய மடைகளிலும் தண்ணீர் செல்லும். விவசாயிகள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. தொடர்ந்து மழைநீர் கால்வாயில் வந்து கொண்டிருக்கின்றது. தொடர் மழை காரணமாக அவர்கள் எதிர்பார்க்கும் அளவை தண்ணீர் எட்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com