ஆள்கொணர்வு மனுவில் காவல்துறை கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ஆள்கொணர்வு மனுவில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆள்கொணர்வு மனுவில் காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்தவர் கே.சுகுமாரி. இவர் தன் கணவர் மாயமானது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கவும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றவும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பது: எனது கணவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை கடந்த 18.01.2012 முதல் காணவில்லை. காவல்துறையினர் வழக்குப் பதிந்தும் கணவரை கண்டறிய முடியவில்லை என வழக்கை முடித்து சிவகாசி நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினரின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு விவரம்: ஆள்கள் மாயமான வழக்கில் மாயமான நபரை கண்டறிய முடியவில்லை எனக்கூறி வழக்கை முடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம்  12.9.2004 -ல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆள்கள் மாயம் உள்பட ஏழு விதமான வழக்குகளைக் கையாள்வது தொடர்பாக டிஜிபி கடந்த 31.01.2005 -ல் அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். 
அந்த  அறிக்கையில், காவல்துறை கணினிப் பிரிவினர் மாயம், கடத்தல், ஓடுதல், தேடப்படும் நபர், தப்பித்தவர், அடையாளம் தெரியாத நபர், அடையாளம் தெரியாத உடல் விண்ணப்பங்களை அனைத்து மாநகர் காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் அனுப்பவேண்டும். வழக்குப் பதிந்தவுடனே விசாரணை அதிகாரி வழக்கு விவரங்களை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.), காவல் கணினிப் பிரிவு மற்றும் டிசிஆர்பி ஆகிய பிரிவுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.  அத்துடன் மாயமான நபர்களின் புகைப்படமும் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் மாயம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் தகவல்களைச் சேகரிக்க ஒரு சார்பு ஆய்வாளர், இரு தலைமைக் காவலர்கள், இரு காவலர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்க வேண்டும். 
ஆள்கள் மாயமான வழக்குகளையும், அடையாளம் தெரியாத உடல்கள் தொடர்பான வழக்குகளையும் உடனுக்குடன், மாவட்ட குற்றப்பிரிவு, குற்ற ஆவணப்பிரிவு ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தத் தகவல்களை பொது மக்கள் சுலபமாக தெரிந்துகொள்ளும் வசதியுடன், காவல்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். 
 குற்றப்பிரிவு போலீஸார் மாயமான நபர்களின் புகைப்படம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு முடிவெடுக்க வேண்டும் என டி.ஜி.பி.உத்தரவில் பல்வேறு வழிகாட்டல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போலீஸார் இதை நடைமுறைப்படுத்தாமல் அனைத்து வழக்குகளிலும் தவறு செய்கின்றனர்.
 ஆள்கள் மாயமான வழக்குகளில் மாயமான நபரை கண்டுபிடிக்கமுடியவில்லை என இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடிக்க முடியாது. விசாரணை நிலையில் தான் கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்யமுடியும். குற்றவியல் நடைமுறைச்சட்டம் 173 (2) படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை விசாரணை தொடர வேண்டும். இந்த உத்தரவை போலீஸார் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com