எழுவர் விடுதலையை அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலையை மேலும் அரசியலாக்காமல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலையை மேலும் அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறினார்.
ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க வலியுறுத்தி மதுரை கோ.புதூரில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. 
இதில் அரிபரந்தாமன் பேசியது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் இந்த ஏழு பேரும் நேரடியாக ஈடுபடவில்லை. நேரடியாக கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்று வரும் பலரை தமிழக அரசு தலைவர்கள் பிறந்தநாள்களை முன்னிட்டு விடுவித்து வருகின்றனர். ஆனால், இவர்களை விடுவிப்பதில் மட்டும் தொடர்ந்து அரசியல் லாபத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
சிறையில் இருக்கும் ஏழு பேரின் குடும்பத்தினரும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோர்கள் தங்களது கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் கழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பேரின் குடும்பத்தினர் எழுவர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இது அரசியல் கட்சியினரின் தூண்டுதலினால் தொடரப்பட்ட வழக்கு என்பது என்னுடைய கருத்து. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், செய்யாத குற்றத்துக்காக சிறையில் இருக்கும் எழுவரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களது தரப்பு நியாயத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
இதை மேலும் அரசியலாக்காமல் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். எனவே தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து எழுவர் விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர் ரவிச்சந்திரன். இவரது  தாய் இந்த கருத்தரங்கில் பேசியது: எனது மகன் ரவிச்சந்திரன் தனது வாழ்நாளில் பாதி நாள்களை சிறையில் கழித்து விட்டார். விதவையான நானும் தற்போது தனிமையில் உள்ளேன்.  தனது கடைசி காலத்தை மகன் ரவிச்சந்திரனுடன் கழிக்க விரும்புகிறேன். எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம்தாழ்த்த கூடாது என்றார்.
வழக்குரைஞர் லஜபதிராய், பேராசிரியர் இரா.முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com