டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் தேர்வுப் பணியில் இறுதி முடிவெடுக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் தேர்வுப் பணியில் விண்ணப்பங்கள் பெறலாம்.

டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் தேர்வுப் பணியில் விண்ணப்பங்கள் பெறலாம். ஆனால் இறுதி முடிவெடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த ஜி.அசோகன், திண்டுக்கல்லைச் சேர்ந்த எம். மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னல்கள், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்ணாடி இழை கேபிள்கள் வழியாக கொண்டு  செல்லப்படுகின்றன. 
மாநிலம் முழுவதும் இதுவரை 32.37 லட்சம் செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 29 லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன. தென்மாவட்டங்களில் மட்டும் 20 லட்சம் இணைப்புகள் உள்ளன. மாநிலம் முழுவதும் 16,359 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். 
நாங்கள் பல லட்சம் முதலீடு செய்து கேபிள் கட்டுப்பாட்டு அறை அமைத்து இணைப்புகள் வழங்கி வருகிறோம். அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு முறையாக கட்டணமும் செலுத்தி வருகிறோம். 
இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் மாநிலம் முழுவதும் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்கனல் விநியோகம் செய்வதற்கான விநியோகஸ்தர்களை தேர்வு செய்ய முடிவு செய்து அதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில், இந்த டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னலை, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு கொண்டு செல்வதற்கு டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுள்ளவர்கள் பிப்ரவரி 20-க்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் கேபிள் டிவி தொழிலில் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  இதனால் பல லட்சம் முதலீடு செய்து கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி பல ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் கேபிள் ஆபரேட்டர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.  டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் தேர்வுப் பணியில் விண்ணப்பங்கள் பெறலாம். ஆனால் இறுதி முடிவெடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக கேபிள் டிவி கார்ப்பொரேஷனின் நிர்வாக இயக்குநர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com