"வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சட்டம் இல்லை'

வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் இல்லை என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் இல்லை என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக மஞ்சமலை அய்யனார் கோயிலில் தரிசனம் செய்து முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளோம்.  தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். 
மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அறிவித்து அதை நிறைவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். அதன்படியே தற்போதைய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் இல்லை. அவரவர் தகுதியின் அடிப்படையில் மக்கள் ஏற்றுக் கொண்டால் வாரிசுகள் அரசியலுக்கு வருவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமுள்ளது. 
மக்களவைத் தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.  அதிமுக தொண்டர்கள் இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லாட்சியை  வழங்கி வருகிறது. 
இந்த 28 ஆண்டு காலமும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வழங்கியதன் மூலம் எங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. எனவே, அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் உறுதியான வெற்றியைப் பெறும். 
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு,  ராஜகண்ணப்பன் பலமுறை பல்வேறு கட்சிகளுக்கு தாவியிருக்கிறார். தற்போதும் அதே நிலையில்தான் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  கட்சி மாறுவது அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com