படிப்பை முடிக்கும் பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது

பட்டப்படிப்பை முடிக்கும் பெண்கள் வீட்டில் முடங்கி விடாமல் பொருளாதார சமூக செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். 


பட்டப்படிப்பை முடிக்கும் பெண்கள் வீட்டில் முடங்கி விடாமல் பொருளாதார சமூக செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். 
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் பவள விழா கொண்டாட்ட நிறைவு விழாவும், கல்லூரி நாள் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்தார். விழாவில் மதுரை மத்தியத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேராசிரியைகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப்பேசியது: 
 கிறிஸ்துவ மிஷனரி நிறுவனங்கள் கல்வித்துறையில் ஆற்றி வரும் பணிகள் சிறப்பானவை. குறிப்பாக பெண் கல்வியில் மிஷனரி கல்வி நிறுவனங்களின் பங்கு மிகச்சிறப்பானது. அண்மையில் சென்னையில் நடந்த 15-ஆவது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சில கருத்துகளை முன்வைத்தேன். அதில் தமிழகம் பெண் கல்வி, பெண்கள் வளர்ச்சி, பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. ஆனால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் நிதி குறைக்கப்படுகிறது. பிகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 
இந்த நிதியை அம்மாநிலங்கள் சரியாக பயன்படுத்துவது இல்லை. எனவே மத்திய நிதிக்குழுவின் அளவுகோல்களை மாற்றி அமைத்து தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். 
தமிழகத்தில் பெண்களுக்கு உலக தரத்திலான கல்வி வாய்ப்புகள் உள்ளன. படிப்பை முடிக்கும் பெண்கள் தொழில், உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு சமூக பொருளாதாரத்துக்கு பங்களிக்க அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பெண்கள் வீட்டில் முடங்கி விட்டால் சமூகத்துக்கு பேரிழப்பாகும் என்றார்.
விழாவில், மதுரை ராமநாதபுரம் திருமண்டில முன்னாள் பேராயர் போத்திராஜூலு, துணை முதல்வர் ரேச்சல் ரெஜி டேனியல் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியைகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com