கேரளத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளுக்கு அபராதம் : கம்பம்மெட்டு மலைச் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளுக்கு அதிக அபராதம் விதிப்பதைக் கண்டித்து, கம்பம்மெட்டு மலைச்


தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகளுக்கு அதிக அபராதம் விதிப்பதைக் கண்டித்து, கம்பம்மெட்டு மலைச் சாலையில் ஜீப்புகளை நிறுத்தி அதன் ஓட்டுநர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம, நகரப் பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள், 800-க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பணை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று திரும்புகின்றனர். தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று திரும்ப கேரளத் தோட்ட உரிமையாளர்களே ஒப்பந்த முறையில் ஜீப் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
எனவே, தினமும் காலை, மாலை நேரங்களில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பம்மெட்டு மலைச் சாலையில் ஜீப்புகள் அணிவகுத்துச் செல்வதைக் காணலாம்.
மலைச் சாலையில் ஆபத்தான வளைவுகளில் ஜீப்புகள் ஒன்றையொன்று முந்திச் செல்வதும், ஒரு வாகனத்தில் 15 முதல் 20 கூலி தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உடும்பன்சோலை மோட்டார் வாகனப் போக்குவரத்து அலுவலர் ஜெயேஷ்குமார், கம்பம்மெட்டு, தூக்குபாலம், நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளில் வாகனச் சோதனை நடத்தினார். அப்போது, அனுமதிக்கப்பட்டுள்ளதை விட அதிகமான ஆள்களை ஏற்றி வந்த பல வாகனங்களுக்கும் 4 நாள்களில் ரூ. 2 லட்சத்துக்கும் மேலாக அபராதம் விதித்தார். மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறிய 10 ஓட்டுநர்களின் உரிமங்களையும் ரத்து செய்தார்.
இதைக் கண்டித்து, திங்கள்கிழமை காலை கம்பம்மெட்டு மலைச்சாலை அடிவாரத்தில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, ஓட்டுநர் சங்க ஒருங்கிணைப்பாளர் தேவாரம் பார்த்திபன் தலைமையில் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்கள் திவான் மைதீன், கணேசன் உள்பட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கேரளத்தில் அபராதம் விதித்ததற்கு இங்கு போராட்டம் நடத்துவது சரியல்ல. ஏலத் தோட்ட உரிமையாளர்கள் மூலம் கேரள அரசு வாகனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று போலீஸார் கூறினர். அதையடுத்து, ஓட்டுநர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, வாகனங்களை கேரளத்துக்கு ஓட்டிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com