கேரளம் செல்ல முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தம்

தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பிலிருந்து திங்கள்கிழமை குமுளி தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு செல்லமுயன்ற


தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பிலிருந்து திங்கள்கிழமை குமுளி தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு செல்லமுயன்ற ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் நினைவு மணி மண்டபத்துக்கு வந்த விவசாயிகள் சங்கத்தினர், தலைவர் எஸ்.ஆர். தேவர் தலைமையில் பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், எஸ்.ஆர். தேவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பெரியாறு அணைக்கு மாற்றாக, கேரள அரசு வண்டிப் பெரியார் மஞ்சுமலையில் புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை கேரள அரசு தடுத்து உள்ளதை மத்திய அரசு ஆய்வு செய்யவேண்டும். ஆண்டிபட்டி வாலிப்பாறையில் தடுப்பணை கட்ட வேண்டும். கூடலூர் அருகே உள்ள சுரங்கனாறு அருவி நீரை தடுப்பணை கொண்டு சேமிக்க வேண்டும். லோயர் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு இடுக்கி மாவட்ட கல்லாறு தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
பின்னர், நிர்வாகிகள் இ.சலேத்து, எஸ்.ஆர். சக்கரவர்த்தி, ச. அன்வர் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் லோயர் கேம்ப்பிலிருந்து குமுளி தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்துக்குச் செல்ல முயன்றனர். அப்போது, காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இரு மாநிலங்களின் பிரச்னை என்பதால், முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும் என காவல் ஆய்வாளர் கூறினார். சுமார் அரை மணி நேர வாக்குவாதத்துக்குப் பின்னர், விவசாய சங்கத்தினர் திரும்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com