போடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்

தேனி மாவட்டம்  போடியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம்  போடியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
 "கஜா' புயலின் காரணமாக போடிப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கி மாலை வரை 6 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிள்ளையார் அணை பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 
 கொட்டகுடி ஆற்றில் வேட்டவராயன் கோயில் அருகே ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற போடி புதூரை சேர்ந்த 2 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து போடி நகர் காவல்துறையினரும்,  தீயணைப்பு துறையினரும் உடனடியாக சென்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரையும்  மீட்டனர்.
 போடியில் கொட்டிய கனமழையால் பெரியாண்டவர் நெடுஞ்சாலை, காமராஜர் பஜார் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காமராஜர் பஜாரில் திருவள்ளுவர் சிலைத் திடல் பகுதியில் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கியது. இதனால் அந்தச் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
 போடிமெட்டு மலைச்சாலையில் கன மழையால் பாறை சரிவு ஏற்படும் அபாயம் இருந்ததால், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேரளாவிற்கு சென்ற தோட்டத் தொழிலாளர்கள் பணி முடித்து திரும்பி வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது.  போடி வட்டாட்சியர்ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் ராமர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com