தேனி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து தகவல்தெரிவிக்க புதிய வசதி: ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க செல்லிடப்பேசி, கட்செவி அஞ்சலில்

தேனி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க செல்லிடப்பேசி, கட்செவி அஞ்சலில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலம் மற்றும் நீர் நிலைகளில் அனுமதியின்றி வண்டல் மண், களி மண், கிராவல் போன்ற கனிமங்களை சட்ட விரோதமாக அள்ளுவது, நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டும் அரிசி, மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை கடத்திச் சென்று கள்ளச் சந்தையில் விற்பது, அரசு மதுக்கடைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் அதிகமாக மது பாட்டில்களை விற்பனை செய்வது, உரிமம் இல்லாமல் செயல்படும் மதுக் கூடம், பொது இடங்களில் மது அருந்துதல், மதுக் கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், பின்னரும் திறப்பது, போதைப் பொருள் விற்பனை ஆகிய குற்றச் சம்பங்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை பொதுமக்கள் குறுந்தகவலாகவோ, புகைப்படம் எடுத்தோ செல்லிடபேசி எண்: 94877 71077-ல் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பலாம். இந்த செல்லிடப்பேசி எண்ணில் கைசாலா என்ற பிரத்யோக செயலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் புகைப்படத்துடன் தகவல் தெரிவித்தால், சம்பவம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிந்து கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
செல்லிடப்பேசியில் கட்செவி அஞ்சல் மூலம் பெறப்படும் தகவல் மற்றும் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார அளவில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்தி, குற்றச்சம்பவங்களை நடைபெறுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com