கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் பலத்த மழை: லோயர்கேம்ப் மலைச் சாலையில் மணல் மூட்டைகள் சரிந்தன

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் மற்றும் குமுளி வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் மற்றும் குமுளி வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. லோயர்கேம்ப் - குமுளி  நெடுஞ்சாலையில் மாதா கோவில் அருகே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் சரிந்து, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.  
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பலத்த மழையால் லோயர்கேம்ப் - குமுளி மலைச்சாலையில் மூன்று இடங்களில் மண் சரிந்து சுமார் 15 நாள்கள் போக்குவரத்து தடைபட்டு, சரிசெய்யப்பட்டது.  லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோயில் அருகே, மண் சரிந்து சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்,  திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால், மணல் மூட்டைகள் சரிந்து,  சாலையின் மறுபுறமும், வெள்ளத்திலும்  இழுத்து செல்லப்பட்டன. 
மலைச்சாலையை ஆய்வு செய்த குமுளி தனிப்பிரிவு காவலர் தகவலின் பேரில் குமுளி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைச்சாலையில் கனரக வாகனங்களை செல்ல விடாமல், இலகு ரக வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். இரவு மழை தொடரும் என்பதால் சாலை சரிவினால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ரோந்து சுற்றி வருகின்றனர். 
கம்பம்: இதே போல் கூடலூர் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழையால் சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சென்றது. கம்பம்  - குமுளி நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் அருகே புதிய பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை. 
இருபுறமும் தனி நபர்கள்  ஆக்கிரமிப்பு செய்திருப்பதால், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுப்பணித்துறை கட்டடத்தின் மீது மோதி சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடி, கழிவுநீர் பொதுப்பணித்துறை  வளாகம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், வனச்சரகர் அலுவலக சாலையில் உள்ள வீடுகள், தனியார் மற்றும் மருத்துவமனைக்குள் புகுந்தது. கழிவு நீரில் குப்பை கூளங்கள் சேர்ந்து புகுந்ததால் தண்ணீரை மின் மோட்டார் மூலம் 
அகற்றும் போது, குப்பை கூளத்தை  அகற்றமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com