தேனி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் வியாழக்கிழமை

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் வியாழக்கிழமை வாக்குச் சாவடிகளில் விறு விறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. 
வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரம் தொடங்குவதற்கு முன்னரே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடையும் நேரம் வரை தொடர்ந்து வாக்குப் பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான்(தனி) ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் காலை 9 மணி வரை மொத்தம் 7.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. காலை 11 மணிக்கு 24.94 சதவீமும், பிற்பகல் ஒரு மணிக்கு 40.97 சதவீதமும், பிற்பகல் 3 மணிக்கு 54.92 சதவீதமும், மாலை 5 மணிக்கு 65.13 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்குச்சாவடி முகவர்களுக்குள் தகராறு: ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையிலான முகவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடியில் இருந்த ஒரு சில கட்சி முகவர்கள் ஓட்டுப்போட வந்தவர்களிடம் குறிப்பிட்ட சின்னத்திற்கு ஓட்டுப்போட வலியுறுத்தினராம். இதனால் வாக்குச்சாவடியில் இருந்த முகவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆண்டிபட்டி  காவல் நிலைய ஆய்வாளர் பாலகுரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் வாக்குச்சாவடிக்குச் சென்று பிரச்னைக்குரிய முகவர்களை வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர். அதன்பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
தள்ளுமுள்ளு:  ரெங்கசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இரண்டு போலீஸார் மட்டுமே பணியில் இருந்தனர். இதனால் வாக்குச்சாவடியில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வாக்காளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக  நின்று வாக்களித்தனர். நீண்ட நேரத்திற்குப்பின் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டனர். 
ஓட்டுப்போட வந்த  90 வயது மூதாட்டி: தேனி மாவட்டம், கம்பம் 6 வது வார்டு மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி ( 90). இவர் வியாழக்கிழமை  நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்ய கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு ஆட்டோ மூலம் வந்தார்.  வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாததால் அவரது பேரன், மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு தூக்கிச் வந்து வாக்குப் பதிவு செய்ய வைத்தார். தள்ளாடும் வயதிலும், ஜனநாயக கடமையான தனது வாக்கினை செலுத்த வந்த மூதாட்டியை வாக்கு சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர்கள்  பாராட்டு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com