ஆண்டிபட்டி பகுதிகளில் மாமரங்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி பகுதிகளில் மாமரங்களில் நோய் தாக்குதல் காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்


ஆண்டிபட்டி பகுதிகளில் மாமரங்களில் நோய் தாக்குதல் காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் உள்ள வைகை அணை, போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மா மரங்கள் பூக்கும். அதன்பின் 2 மாதத்தில் காய்கள் காய்த்து பறிக்கும் நிலைக்கு வந்து விடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் காய்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும் முதிர்ந்த காய்கள் பழங்களுக்கு பயன்படுத்தப்படும். அதை தொடர்ந்து ஆகஸ்ட் வரையில் மாம்பழங்கள் வரத்து ஏற்படும்.
விவசாயிகள் ஏமாற்றம்: கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பூத்துக் குலுங்கிய மாமரங்கள் மூலம் இந்தாண்டு அதிகப்படியான விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மாமரங்களில் இருந்த பூக்கள் படிப்படியாக உதிர்ந்து வருகின்றன. அதனுடன் பிஞ்சுகளும் உதிர்வதால் மரங்களின் விளைச்சல் குறையத் தொடங்கியுள்ளது. மரங்களில் தேன் ஒழுகல் நோய், சிலந்தி பூச்சி தாக்குதலால்  ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள்தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது, அதிக விளைச்சல் தரும் என்று நம்பிக்கையில் கூடுதல் செலவு செய்து சில வகை மருந்துகளைத் தெளித்தோம். ஆனால் மாமரங்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதால், விளைச்சல் பெருமளவில் பாதித்துள்ளது. 
மாவட்டத்தில் இருந்து ரூ.50 கோடிக்கு மாங்காய், மாம்பழம் வர்த்தகம் நடைபெறும். இந்தாண்டு மரத்தில் நோய் தாக்கம் காரணமாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. எனவே, வேளாண் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com