காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, பழனி மற்றும் பெரியகுளம், கம்பம்

காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, பழனி மற்றும் பெரியகுளம், கம்பம்  பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
சமீபத்தில், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 
தீவிரவாதிகளின் இச்செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல இடங்களிலும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 
பழனி வட்டார முன்னாள் ராணுவ நலச் சங்கத்தினர் சார்பில், பழனியில் அமைதிப் பேரணி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் சாமிப்பிள்ளை, செயலர் மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணியில், தேசியக் கொடியை ஏந்தியும், மலர் வளையம் மற்றும் பதாகைகள் ஏந்தியும், ராணுவ வீரர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.
    பழனி அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இப்பேரணியானது, பேருந்து நிலையம், புதுதாராபுரம் சாலை வழியாக சங்க அலுவலகத்தை அடைந்தது. இதில், தரைப் படை, விமானப் படை, கப்பல் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
     பின்னர், உயிரிழந்த வீரர்களின் உருவப் படத்துக்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் சார்பில், வீரவணக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, விழுதுகள் இளைஞர் மன்றப் பொருளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தாமரைக்குளம் நகர் நலக் கமிட்டி நிர்வாகி சுப்பையா முன்னிலை வகித்தார்.
     இந்நிகழ்ச்சியில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ராணுவ வீரர்களின் நிலை குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினர்.
இதில், தாமரைக்குளம் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், காஷ்மீரில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைக் கண்டித்தும், உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மௌன ஊர்வலமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 
மௌன ஊர்வலமானது, கம்பம்மெட்டுச் சாலையில் உள்ள  கட்சி அலுவலகத்தில் தொடங்கி, பாவலர் படிப்பகம், புதுப் பள்ளிவாசல், நகராட்சி வரி வசூல் மையம் அருகே நிறைவடைந்தது. 
அங்கு, அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
     இதில், மாவட்டச் செயலர் ரியாஸ் தலைமையில், துணைச் செயலர்கள் கம்பம் கலீல், தமிமுன் அன்சாரி மற்றும் ஒன்றியச் செயலர் ரபீக் முகம்மது, நகர துணைச் செயலர் இப்ராகிம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
    பாதுகாப்பு பணியில், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர்  சீமைச்சாமி தலைமையில் போலீஸார்  ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com