தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் அனுமதியின்றி மீன் வளர்ப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதாகப் புகார்

தேனியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாயில் அனுமதியின்றி மீன்

தேனியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாயில் அனுமதியின்றி மீன் வளர்க்கப்படுவதால், கண்மாய் நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது.
     தேனியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாய், தற்போது ஆக்கிரமிப்பால் 25 ஏக்கர் பரப்பளவுக்கும் குறைவாக சுருங்கிவிட்டது. தேனி நகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாகவும், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியும் உள்ள இந்தக் கண்மாயில், அல்லிநகரம் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு கழிவு நீரோடைகளில் இருந்தும் கழிவு நீர் கலக்கிறது.
இக்கண்மாயில் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் கடந்த 2017-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், கண்மாயில் அனுமதியின்றி மீன் வளர்ப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீன் வளர்ப்புக்காக கண்மாயில் காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. கண்மாய் கரையோரப் பகுதிகள் இரவில் மது அருந்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கண்மாய் நீர் மற்றும் சுற்றுசூழல் மாசுபட்டு வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
ஆனால், இக்கண்மாயில் அனுமதியின்றி மீன் வளர்க்கப்படுவதை தடை செய்யவும், கண்மாய் மாசுபடாமல் பாதுகாக்கவும், பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து தேனியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், இந்து எழுச்சி முன்னணி தேனி ஒன்றியச் செயலர் ஐயப்பன் தலைமையில் நிர்வாகிகள், ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளித்தனர்.
அதில், மீறுசமுத்திரம் கண்மாயில் கழிவு நீர் கலப்பதையும், மீன் வளர்ப்புக்காக காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடை செய்யவும், கண்மாய் கரையோரப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை இடம் மாற்றம் செய்யவும், கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சுற்றுலாத் துறை சார்பில் படகு குழாம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com