திருநள்ளாறு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் சந்திப்பு

திருநள்ளாறு தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களை

திருநள்ளாறு தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சந்தித்து வருகிறார். மின்சார பிரச்னை, தண்ணீர் வடியாதது உள்ளிட்ட குறைபாடுகளைக் களையும் விதத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், திருநள்ளாறு தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை பத்தக்குடி, வளத்தாமங்களம் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து புதன்கிழமை வளத்தாமங்களம் மேற்கு, கருக்கன்குடிபேட், இளையான்குடி,  சாலாபடுகை உள்ளிட்ட குடிசைப் பகுதிகள் அதிகமுள்ள பகுதிகளில் மழை, புயல்  பாதிப்பு உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டார். இந்த மக்கள் சந்திப்பு குறித்து அமைச்சர் புதன்கிழமை கூறியது : கஜா புயல் கடுமையாக வீசியதோடு, கடந்த 2 நாள்களாக கனமழை காரைக்கால் பகுதியில் பெய்து வருகிறது. திருநள்ளாறில் பல்வேறு கிராம மக்களை நேரில் சந்தித்து, பாதிப்பு நிலைகளை நேரில் அறிந்து வருகிறேன்.
குடியிருப்புகளைச் சுற்றி  தண்ணீர் வடியாமல் இருப்பது குறித்தும், மின்சாரப் பிரச்னை குறித்தும் பலர் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.
அரசு தரப்பில் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள மானியம் அளிக்கும் திட்டம் உள்ளதை குடிசைவாசிகள் பயன்படுத்திக் கொண்டு வீடு கட்டிக்கொள்ளும்படியும், இதனால் பெரு மழைக் காலத்தில் மனநிம்மதியுடன் வாழமுடியும் என்பதை அறிவுறுத்தி வருகிறேன். மழையின்போது எந்தவொரு பிரச்னை குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்டாலும், தம்மை தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு 
கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com