ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது: ஏ.எம்.எச்.நாஜிம்

கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு

கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது என திமுக வலியுறுத்தியுள்ளது.
 காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது :  காவலர் பணி தேர்வுக்கான வயது வரம்பை 24-ஆக தளர்த்தி புதுச்சேரி அமைச்சரவை முடிவெடுத்தது. பல தரப்பினரின் கோரிக்கையின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இந்த முடிவை எடுத்தது. ஆனால் துணை நிலை ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காதது மிகவும் கண்டனத்துக்குரியது. புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சுமார்  400 பேர் வேலை வாய்ப்பை பெறக்கூடிய தேர்வாக இது அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்கே சென்றுள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் பலரும் கூட இந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  வேலை வாய்ப்புகள் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் முடிவெடுக்க முடியுமே தவிர ஆளுநர் அல்ல.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி (தொழில் கல்வி) இலவசமாக அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. இதனை நம்பி பல மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர். இதற்கும் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், கல்லூரி நிர்வாகங்களின் நெருக்குதலுக்குள்ளாகி கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். 
 கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான விஷயங்களைத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் முடிவு  செய்யும். ஆளுநர் முடிவெடுக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை முடிவுகளை மதிக்காத, ஏற்காத துணை நிலை ஆளுநர் இனி ஒரு நிமிடம் கூட புதுச்சேரியில்  பொறுப்பில் நீடிக்கக் கூடாது. மத்திய உள்துறை அமைச்சகம் அவரை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
குடும்ப அட்டை வழங்கல் விவகாரம் தொடர்பாக மேலும் அவர் கூறியது :  காரைக்கால் மாவட்டத்தில் 30,408 மஞ்சள்  நிற வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோருக்கான அட்டையும், 29,472 சிகப்பு நிற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான அட்டையும் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியை ஒப்பிடும்போது, காரைக்காலில் சிகப்பு அட்டை வைத்திருப்போர் வீதம் குறைவுதான். சிகப்பு அட்டை வேண்டி விண்ணப்பித்திருப்போருக்கு தகுதியை ஆராய்ந்து தருமாறு கோரிக்கை விடுப்பது இதுவரை ஏற்கப்படவில்லை. தற்போது 4 ஆயிரம் பேர் சிகப்பு அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். இது 8 மாதமாக நிலுவையில் இருக்கிறது.
இதற்கான அனுமதியை குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநரகம் தரவில்லை. ஏழை, எளிய மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். காரைக்காலில் 864 பேர் சிகப்பு அட்டை வைத்திருக்க தகுதியுடையவரல்ல என கண்டறியப்பட்டு மஞ்சள் நிற அட்டையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பதாரர்களில் தகுதியை ஆராய்ந்து, நீக்கம் செய்த 864 அட்டையை தரலாம் என கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கான அனுமதி இயக்குநரிடமிருந்துதான் வரவேண்டும் என காரைக்கால் துணை இயக்குநர் கூறுகிறார். அட்டை மாற்றத்துக்கான பாஸ்வேர்டும் புதுச்சேரி இயக்குநரகமே வைத்துள்ளது. இதுகுறித்தெல்லாம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கும் வகையில் அதிகாரம் தரப்படவேண்டும். அதிகாரத்தை புதுச்சேரியிலேயே குவித்துவைத்திருப்பதால் காரைக்கால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து, தகுதி அடிப்படையில் சிகப்பு நிற அட்டை தரவேண்டும் என்றார் நாஜிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com