திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை விரிவாக்கப் பணி தாமதத்தால் மக்கள் அவதி

திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான ரூ.11.80 கோடி திட்ட சாலை விரிவாக்கத் திட்டப் பணி  தாமதத்தால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுன்றனர்.  

திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான ரூ.11.80 கோடி திட்ட சாலை விரிவாக்கத் திட்டப் பணி  தாமதத்தால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுன்றனர்.  
திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சுமார் 12 கி.மீ. தூரத்திலான சாலை ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக மேம்படுத்தப்படவில்லை. இதனால் சாலையில் ஏராளமான பள்ளங்கள், சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகிவிட்டது. இதுகுறித்து அந்த பகுதியினர் கூறும்போது, நீண்ட காலமாக இந்த சாலை மோசமடைந்த நிலையிலேயே தொடர்ந்தது. அமைச்சரின் தீவிர முயற்சியால் சாலை விரிவாக்கத்துக்கு நிதியாதார ஒப்புதல் கிடைத்து பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் குறித்த ஓராண்டுக்குள் பணிகள் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. இந்த சாலை ஆங்காங்கே மிகவும் மோசமான நிலையில் உள்ளது.   தவிர,  விரிவாக்கப் பணியாக சாலையோரத்தில் கான்கிரீட் போடப்பட்டிருப்பதாலும், சாலையில் பயணிப்பதில் வெகுவாக சிரமம் ஏற்படுகிறது. இரவு நேர பயணத்தில் விபத்து ஏற்படுகிறது. பருவமழைக்காலம் வந்துவிட்டால் இதில் பயணிப்பது ஆபத்தாகவே இருக்கும். பருவமழையால் இந்த சாலை மேலும் மோசமடையும். எனவே குறிப்பிட்ட காலத்தில் சாலையை விரிவாக்கம் செய்துத்தரவேண்டியது பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் பொறுப்பாகும் என்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரத்திடம் ஞாயிற்றுக்கிழமை கேட்டபோது, நபார்டு வங்கியின் அனுமதிக்குப் பின்னர் இந்த திட்டப்பணிக்கான நிதி கிடைத்துள்ளது. எனவே மின்கம்பங்களை நகர்த்தி நடுவது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கவேண்டியுள்ளது. நிதி ஓரளவு வந்துள்ளதால், இந்தப் பணிகளை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ, அவ்வாறு செய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் கூறும்போது,  நபார்டு வங்கியின் கடனுதவியில் இந்த சாலைப் பணி நடைபெறுகிறது. நபார்டு வங்கி தற்போதுதான் நிதியை வழங்கியுள்ளது. ஒவ்வொரு கட்டங்களாகப் பணியை நிறைவு செய்து, அதனை நபார்டு குழுவினர் ஆய்வு செய்துவிட்ட பின்னரே அடுத்தக்கட்ட நிதி தரப்படும். எனவே இந்த திட்டத்துக்கு  நிதி வரத்து தொடங்கிவிட்டதால், திட்டப்பணிகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறையை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com