செப். 28-இல் மருந்துக் கடைகள் அடைப்புப் போராட்டம்

காரைக்காலில் வரும் 28 -ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து, மருந்துக் கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்காலில் வரும் 28 -ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து, மருந்துக் கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால்  மாவட்ட மருந்துக் கடை உரிமையாளர் சங்க துணைத் தலைவர் எம். குமரவேல், செயலர் டி. கோவிந்தராசு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆர். கேவசனை சந்தித்து, போராட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கான கடிதத்தை திங்கள்கிழமை அளித்தனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியது :  மத்திய அரசு ஆன்லைன் மூலமாக மருந்துகளை விநியோகிக்க முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின்படி பொதுமக்களுக்கு மருந்துகளை மருந்துக் கடை வைத்திருப்போர்  விற்பனை செய்து வருகின்றனர்.  மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை பெறுவதன் மூலம் பொதுமக்கள் பயனடைகின்றனர்.
இந்த மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம் மருந்துக் கடைக்கு என பெரும் முதலீடு வைத்து வியாபாரம் செய்வோரும், மருந்துக் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பத்தினரும் சீரான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால், ஆன்லைன் மூலம் மருந்து விநியோகம் என்பது ஏற்புடையதாக இருக்காது. ஆன்லைன் வர்த்தகம் என்பது பிற பொருள்களுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கும். மருந்துகளையும் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கினால், பொதுமக்கள் பல்வேறு வித பாதிப்புகளைச் சந்திக்கும்  சூழல் உருவாகும். மருந்துக் கடை நடத்துவோர், தொழிலாளர்களும் பெருமளவு பாதிக்கப்படுவர்.
எனவே,  இந்த முடிவை கைவிட வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் வரும் 28 -ஆம் தேதி மருந்துக் கடைகள் அடைத்துப் போராட்டம் நடத்த தலைமை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
காரைக்கால் மாவட்ட சங்கமும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 114 மருந்துக் கடைகள் செயல்படுகின்றன. இவையனைத்தும் செப். 28 -ஆம் தேதி அடைப்பு செய்யப்படும். அரசு மருத்துவமனையினுள் மருந்தகம், தனியார் மருத்துவமனை, கிளினிக்குகளில் உள்ள மருந்தகங்களுக்கு இது பொருந்தாது. பொதுமக்கள் செப். 28 -ஆம் தேதி அவசரமாக மருந்துகள் தேவைப்படுகிறது என்றால், 8148188806 மற்றும் 9788899676 என்ற  செல்லிடப் பேசி எண்ணை தொடர்புகொண்டால், மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com