ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருதால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் என்கிற பெயரில் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும்

மத்திய அரசு 2 ஆண்டுகளாக ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் என்கிற பெயரில் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் தூய்மையை மையமாக கொண்டு விருது வழங்கி வருகிறது. அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறையும் நிலையில், இந்த விருது மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது.
அனைத்து அரசுப் பள்ளிகளும் இம்மாதிரியான போக்கில் பயணித்தால், அரசுப் பள்ளிகளின் மீதான நாட்டம் மாணவர்கள், பெற்றோர்களிடையே அதிகரிக்கும் என சமூகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தது முதல் இத்திட்டத்தை சார்ந்து பிற திட்டங்களும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் பங்கெடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைவரது வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை இருக்க வேண்டும் என்பதும் தூய்மைக்கான திட்டத்தில் அடங்குகிறது. 
பள்ளி, கல்லூரிகள் அளவில் மாணவர்களிடையே தூய்மை குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, வீடுகள் அளவில் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது. இதனடிப்படையிலேயே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது வழங்கும் வகையில், நாடு முழுவதும் பள்ளிகளில் கையாளப்படும் தூய்மை, மாணவர்கள் கை கழுவும் விதம், கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு  செய்து விருது வழங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளை ஆய்வு செய்து, ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது வழங்கி வருகிறது. நிகழாண்டு இந்த விருது பெறும் வகையில்,  நாடு முழுவதுமிருந்து 6 லட்சம் பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. மாவட்ட, மாநில அளவிலான குழுவினர், பள்ளிகள் நேரிடையாக அனுப்பும் தகவல்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றை ஆய்வுக்குள்படுத்தி விருதுக்கு தேர்வு செய்கிறது.
இவற்றில் நிகழாண்டு 54 பள்ளிகள் நாடு முழுவதுமிருந்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. நாட்டிலேயே புதுச்சேரி மாநிலம் 7 பள்ளிகள் தேர்வாகி முதலிடத்தைப் பிடித்தன. மாவட்ட அளவில் புதுச்சேரிக்கு முதல் பரிசும், ஆந்திர மாநிலம் திருக்காகுளம் மாவட்டம் 2 -ஆவது பரிசும், காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு பகுதி அகலங்கண்ணு கிராமம் அரசு தொடக்கப்பள்ளி, கோட்டுச்சேரி பகுதி கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் தேர்வானதால் 3-ஆவது பரிசும் கிடைத்தது. நாட்டிலேயே புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும் பள்ளிகளில் தூய்மை பராமரிப்பதில் சிறப்பிடம் கிடைத்தது பெருமைக்குரியதாக கல்வி வட்டாரத்தில் பேசப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி,  தனியார் பள்ளிகள் என 160 பள்ளிகள்  உள்ளன. ஏறக்குறைய 15 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தூய்மைக்கும், மாணவர் சேர்க்கைக்குமான தொடர்பு : குடிநீர் பிரிவு, கழிப்பறை பிரிவு மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மையை எவ்வாறு மாணவர்கள் பராமரிக்கிறார்கள் என ஆய்வு செய்தே இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் காரைக்கால் மாவட்டத்தில், கோட்டுச்சேரிபேட் அரசு தொடக்கப்பள்ளி 2 ஆண்டுகளாக தொடர்ந்து தேசிய விருது பெற்று வருகிறது. அகலங்கண்ணு அரசு தொடக்கப்பள்ளி முதல் முறையாக நிகழாண்டு பெற்றுள்ளது.
இதுகுறித்து கோட்டுச்சேரிபேட் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் எஸ். விஜயராகவன் கூறியது : 
இப்பள்ளி தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருதை பெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக பள்ளியில் தூய்மை குறித்து விழிப்புணர்வும், செயல்பாடுகளும் எந்தவித விருது, ஆதாயத்தை எதிர்பார்க்காமல் செய்து வருகிறோம். கடந்த 2016-17 -ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த விருதுக்கு விண்ணப்பித்தபோது, அப்போது நாடு முழுவதும் 172 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டதில் இந்த பள்ளியும் விருது பெறும் தகுதிக்குள் வந்தது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. மைதானத்தில் சேரும் குப்பைகளை, மறுசுழற்சி செய்து இயற்கை உரமாக்குகிறோம். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு செய்யப்படுகிறது. சுற்றுவட்டார கிராமமக்கள், பள்ளியின் தடுப்புச் சுவர் அருகே பொது கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். 
இந்த மாணவர்களைக்கொண்டு, கிராமத்தினரிடையே வில்லுப்பாட்டு மூலம் தூய்மை குறித்தும், பொது கழிப்பிடமாக பயன்படுத்துவதால், பள்ளி மாணவர்களாகிய தங்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் கிராமத்தினர் மாணவர்களின் கருத்தை ஏற்று நடந்துகொள்கின்றனர். கடந்த ஆண்டு எல்.கே.ஜி. முதல் 5 -ஆம் வகுப்பு வரை வெறும் 70 மாணவர்களைக்கொண்டு நடைபெற்று வந்த பள்ளியானது, முதன்முதலாக ஸ்வச் வித்யாலயா விருது வாங்கியதுக்குப் பின் நிகழ்கல்வியாண்டில் கூடுதலாக 120 பேர் சேர்ந்து, மொத்தம் 190 மாணவர்கள் பயிலும் நிலையில் இந்த கல்வி நிலையம் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளில் தமது குழந்தையை படிக்க வைத்த பல பெற்றோர்களும், இந்த பள்ளியில் நிகழாண்டு தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளதை பெருமையாகக் கூறமுடியும் என்றார்.
அகலங்கண்ணு அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் த. மல்லிகா கூறியது : இந்த பள்ளியில் மாணவர்களுக்கு நெல் சாகுபடி மற்றும் உளுந்து, பயிறு சாகுபடி குறித்து நேரிடையாக பள்ளி வளாகத்திலேயே பயிர் செய்து பயிற்சி தரப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு செய்யப்படுகிறது. ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது பெறும் வகையில் பள்ளியில் பல விதத்திலும் தூய்மை கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு ஸ்வச் புரஸ்கர் விருதை பள்ளி பெற்றுள்ளது என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கூறும்போது, நாட்டிலேயே அதிக பள்ளிகள் ஸ்வச் வித்யாலயா புரஸ்கர் விருது பெறுவதில் காரைக்கால் மாவட்டம் 3 -ஆம் இடத்துக்கு தேர்வானது. அதனடிப்படையில், நான் விருதை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடமிருந்து பெற்றேன்.  இதன்மூலம் காரைக்காலுக்கு பெருமை கிடைத்துள்ளது என்றார் அவர். இரண்டு பள்ளிகள் பெற்ற விருது, பிற பள்ளிகளும் வருமாண்டு போட்டியில் பங்கெடுக்கும் வகையிலான ஊக்கத்தை ஏற்படுத்தியிருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com