குடிமனைப் பட்டா போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

இலவச மனைப்பட்டா வழங்குவதற்கு திட்டமிட்டவாறு நிலத்தை முழுமையாக கையகப்படுத்தி, பட்டா வழங்க ந

இலவச மனைப்பட்டா வழங்குவதற்கு திட்டமிட்டவாறு நிலத்தை முழுமையாக கையகப்படுத்தி, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்காலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காரைக்கால் பகுதி கல்லறைப்பேட் கிராமத்தினருக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதில் தாமதம் நிலவி வருவதையொட்டி, குடிமனைப் பட்டா போராட்டக் குழு அமைப்பு ஏற்படுத்தி, புதுச்சேரி அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதன்படி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் என். காமராஜ் தலைமை வகித்தார். கல்லறைப்பேட்  கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
கல்லறைப் பேட் கிராம மக்களுக்கான, மனைப் பட்டா வழங்குவதற்கு நிலம் கையகப்படுத்த 2012-15-ஆம் ஆண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் பட்டா வழங்கும் நடைமுறை காலம் கடந்து சென்றதால், 2014 -ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் நில மதிப்பு கொள்கையால், கையப்படுத்தக்கூடிய நிலத்தின்  மதிப்பு தற்போது இரண்டு மடங்காகக் கூடியது.  எனவே இலவச மனைப்பட்டா வழங்க முடியாத நிலை நீடிக்கிறது.
இந்தக் கூடுதல் தொகையை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அரசு ஒதுக்கி, பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு  மாவட்டத் தலைவர் கே.ஆர். பக்கிரிசாமி,  பொருளாளர் எம்.சந்திரசேகரன், அம்பேத்கர் ஒருமைப்பாட்டு இயக்கத் தலைவர் ராஜலட்சுமணன், அம்பேத்கர் சமுதாய மேம்பாட்டு மையத் தலைவர் நாக.தணிகாசலம், சமூக பிரதிநிதி ஐயப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
தீர்மானம் : கூடுதல் நிதியை ஒதுக்கி நிலத்தைக் கையப்படுத்தி, கல்லறைப்பேட் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும். பட்டா கிடைக்கும் வரை தேர்தல்களில் வாக்களிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com