உழவர் திருநாள்: பாரம்பரிய கலை விழா கொண்டாட்டம்

காரைக்கால் பகுதி நெடுங்காட்டில் காணும் பொங்கலையொட்டி அரசுத்துறைகள் சார்பில் பாரம்பரிய கலை விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 

காரைக்கால் பகுதி நெடுங்காட்டில் காணும் பொங்கலையொட்டி அரசுத்துறைகள் சார்பில் பாரம்பரிய கலை விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 
இதில் அமைச்சர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
உழவர் திருநாளையொட்டி நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து, சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத் துறை இணைந்து நெடுங்காடு பகுதி குரும்பகரத்தில் பாரம்பரிய கலை விழாவை வியாழக்கிழமை நடத்தியது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
தொடக்க நிகழ்வில், அரசு ஆதிதிராவிட மாணவர் தங்கும் விடுதியில் பாரம்பரிய முறையில் மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் மாட்டு வண்டிகளில் பொதுமக்கள் ஊர்வலமாக குரும்பகரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திடல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒரு மாட்டு வண்டியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஓட்டி வர, அதில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், சார்பு ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா ஆகியோர் அமர்ந்து வந்தனர். பாரம்பரிய நடனக் கலைக் குழுவினருடன் மாட்டு வண்டிகள் குரும்பகரம் மாரியம்மன் கோயில் திடலுக்குச் சென்றடைந்தன. தமிழர்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திய அரிய வகை கலைப் பொருள்கள் அங்கு பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 
குறிப்பாக நெட்டி மாலை, கழுத்து சலங்கை, கடகுச்சி, பழங்கால அரிகேன் விளக்கு, மாட்டு கழுத்து மணி, கெட்டில்கள், சுவரொட்டி விளக்கு, சுக்கான்பை, ஓலைச்சுவடி, பூவாளி, நெல்கோட்டை, அகப்பை, பழங்கால செப்புப் பாத்திரங்கள், கிராமபோன் தகடு, கடிகாரம், மரக்கால், நாணயங்கள், உரல், உலக்கை, சட்டக் கலப்பை, நெல் அளக்கும் பரை, குத்துக்குழா உள்ளிட்ட  பல்வேறு வேளாண் சார்ந்த கருவிகள், பல்வேறு புராதனப் பொருள்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதனை அமைச்சர், எம்.எல்.ஏ. ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும், பொதுமக்களும் பார்வையிட்டனர். கலை விழாவையொட்டி கிராம மக்களிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர். 
நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், "இது உழவர்களுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் பொங்கல் காலக்கட்டத்தில் நடத்தப்படுவது அவசியமான ஒன்றாகும். மாறிவரும் காலச் சூழலில் பழைமையான பல விஷயங்களை தற்போதைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி பாராட்டுக்குரியதாகும்' என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சியர், சார்பு ஆட்சியர், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். காலை 9 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரை இக்கொண்டாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com