ஆறுதல் அளிக்கும் மின்வாரியப் பணிகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து, அங்கு  நடைபெற்று வரும்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து, அங்கு  நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் மின்வாரியத்தால் மேற்கொள்ளப்படும் துரித பணிகள் ஆறுதல் அளிப்பதாக  உள்ளது. 
வேதாரண்யம் பகுதியில் வீசிய கஜா புயலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக எடுக்கப்பட்டு வரும் மீட்புப் பணிகள் அனைத்துமே சுணக்கமாக உள்ளது. சுகாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளின் பணிகள் வேகப்படுத்தாமல் பெயரளவில் உள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரமாகியும் இன்னும் பல கிராமங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அவசர தேவைகள் சென்றடையவில்லை. முக்கிய சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், பல கிராமங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. சில கிராமங்களில் மக்களே தங்களது சொந்த செலவில் இயந்திரங்களை வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மின்வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வேகமடைந்து வருவது பாராட்டுக்குரியது. வேதாரண்யம் பகுதியில் முதல் கட்டமாக பிரதான சாலையோரங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளும், அதற்கான உபகரணங்களை இறக்குவதும் மற்றத் துறையினரின் பணிகளைவிட வேகமாகவே நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை பெய்த மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் ஓய்வு இன்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். புதன்கிழமையும் அதே துரித வேகத்தில் பல இடங்களில் பணியாளர்கள் பணியாற்றினர். மருதூர்- தகட்டூர் பிரதான சாலையோரத்தில் மின்கம்பங்கள் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்பகுதியில் 90 மின்கம்பங்களை நடும் பணியை முடித்த பிறகே மதிய உணவு சாப்பிட ஊழியர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அப்பகுதியில் நடைபெற்ற சாலை மறியலால் மீட்புப் பணி வாகனங்கள் செல்வதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், மறியலுக்கு பின்னர் வெகுநேரம் பணியில் ஈடுபட்ட பிறகே ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com