சந்தப்படுகை-பெராம்பட்டு கதவணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்யப்பட்டு, நிதி மதிப்பீட்டுக் குழுவுக்கு

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்யப்பட்டு, நிதி மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்தப்படுகை- பெராம்பட்டு கதவணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
கொள்ளிடத்துக்கு குடந்தை அரசன் தலைமையில், காவிரி உரிமைக் குழுவினர் புதன்கிழமை வந்தனர். பல்வேறு பாசன வாய்க்கால்களைப் பார்வையிட்ட அக்குழுவினர், விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த பழ ராஜேந்திரன், முருகையன், செல்லையன், கொள்ளிடம் வட்டார  விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், குடந்தை அரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்குப் பிறகு ஆதனூர், குமாரமங்கலம் இடையே அரசு கதவணைக் கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதே வேளையில், சந்தப்படுகை- பெராம்பட்டு இடையே  ஆய்வு செய்து நிதி மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட கதவணைத் திட்டத்தை உடனடியாக  நிறைவேற்றி, அணையில் தேக்கப்பட்ட நீரை தெற்கு ராஜன் வாய்க்கால் மூலமாக சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி  பெற்று பயன்பெற ஆவன செய்ய வேண்டும்.
இக்கதவணை திட்டத்தின் மூலம் கடலிலிருந்து சுமார் 12 மீட்டர் தூரத்துக்கு உப்புநீர் ஊடுருவியிருப்பதைத் தடுக்க வழிவகை செய்ய முடியும். மேலும் கூடுதலாக தண்ணீர் வரத்து உள்ள காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரைத் திறப்பதன் மூலம் கழிமுகப் பகுதிகளை நன்னீர் பகுதியாகப் பராமரிக்க முடியும்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டுமானப் பணியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களை உள்ளடக்கிய விசாரணைக்குழு அமைத்து, விசாரிக்க வேண்டும். கொள்ளிடம் வலது கரை, அணைக்கரையிலிருந்து காட்டூர் வரை மிகவும் பலவீனமாக உள்ளது. இதை மழைக்காலத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com