கூட்டுப் பண்ணையத்தில் டிராக்டரை பராமரிக்கும் விவசாயிகள்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் கூட்டுப் பண்ணையம் திட்டத்தில் கிடைத்த உதவியில்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் கூட்டுப் பண்ணையம் திட்டத்தில் கிடைத்த உதவியில் டிராக்டர் வாங்கிய விவசாயிகள் தங்களது விளைநிலத்தை உழவு செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் வேளாண்துறை மூலமாக கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 20 பேர் கொண்ட விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு வேளாண்மை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இக்குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு, தொகையில் பண்ணைக் கருவிகள் வாங்கி பராமரிக்கவும் வகை செய்யப்படுகிறது.
5 ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட தனி குழுவாக அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதில் ஆர்வலர் குழுக்களில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் தலைவர், செயலர்களாக இருந்து செயல்படுவர். தலைஞாயிறு-1 மற்றும் 3-ஆம் சேத்தி பகுதியில் 2017-18-ல் ஏற்படுத்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழு தற்போது டிராக்டர் வாங்கி பராமரித்து தங்களது நிலங்களை குறைந்த செலவில் உழவு செய்து வருகின்றனர். ஆர்வலர் குழுக்கு அரசு வழங்கிய மானியத் தொகையான ரூ. 5 லட்சம் அல்லாது உறுப்பினர்கள் நூறு பேரும் தலா ரூ. ஆயிரம் பங்கு தொகையாக செலுத்தி ரூ. 6.02 லட்சம் மதிப்பில் புதிதாக டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். ஒரு மணி நேரம் உழவு செய்ய தனியாரிடத்தில் வாடகைத் தொகையாக ரூ. 800 முதல் ரூ.1,000 வரை பெறப்படுகிறது. இது தவிர்த்து தங்களது நிலத்தை உழவு செய்ய ரூ. 700 வாடகையாக குழு உறுப்பினர்கள் நிர்ணயித்துக்கொண்டுள்ளனர்.
குழுத் தலைவர் சிவானந்தம், செயலாளர் நடராசன், பொருளாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த டிராக்டர் தற்போது 200 மணி நேரம் உழவு செய்துள்ளது.
இதில், வாடகையாக வந்த ரூ. 1.40 லட்சத்தில் ஓட்டுநர் கூலி, எரிபொருள், இதர பராமரிப்பு செலவினங்கள் போக ரூ. 88 ஆயிரத்தை லாப தொகையாக கணக்கிட்டுள்ளனர். இந்த லாபத் தொகையில் சுழற் கலப்பை வாங்கவும் தற்போது தீர்மானித்துள்ளனர். டிராக்டர் பராமரிப்பில் பங்கு தொகையாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ. 6 ஆயிரம் இருப்பதாக கூறும் விவசாயிகள் உழவுக்கு குறைந்த வாடகை அளிக்கப்படுவதும், குறித்த காலத்தில் தேவையை நிறைவு செய்துக்கொள்வதும் லாபமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வேளாண் உதவி இயக்குநர் ஸ்டீபன் சக்கவர்த்தி, துணை வேளாண் அலுவலர் ஜீவன், உதவி விதை அலுவலர் ரவி உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் வியாழக்கிழமை உழவர் குழு பராமரிப்பை ஆய்வு செய்து, வங்கி கணக்குகள் இருப்பு விவரங்களை கேட்டறிந்தனர். இக்குழு சிறப்பாக செயல்படுதை அறிந்து கூடுதல் தேவைகளை பெற்றுத்தரவும் உறுதியளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com