வாய்க்காலில் கழிவுநீர் தேக்கம்: கொசுக்கள் உற்பத்தியால் பொதுமக்கள் அவதி 

நாகை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள திருத்தோணிபுரம் வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரால்

நாகை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள திருத்தோணிபுரம் வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரால், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. 
கழுமலையாற்றின் கிளை வாய்க்காலான திருத்தோணிபுரம் பாசன வாய்க்கால், சீர்காழி பழைய அரசு மருத்துவமனை பகுதியிலிருந்து சிங்காரத்தோப்பு, கைவிளாஞ்சேரி, செம்மங்குடி வழியாகச் சென்று திருத்தோணிபுரத்தை அடைகிறது. மேலும், அரசு மருத்துவமனை சாலை, புதிய பேருந்து நிலையம்,சிங்காரத்தோப்பு ஆகிய பகுதிகளின் மழைநீர் வடிகாலாகவும் இந்த வாய்க்கால் இருந்துவந்தது. 
காலப்போக்கில் இந்த பாசன வாய்க்காலின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, வாய்க்கால் இருந்த சுவடே தெரியாமல் மாறிவிட்டது. தற்போது, சீர்காழியில் சில கிலோமீட்டர் தூரம் வரை  செல்லும் இந்த வாய்க்கால்,  அரசு மருத்துவமனை சாலை, சட்டைநாதர் காலனி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தகக் கட்டடங்களிலிருந்து வெளியாகும் கழிவுநீர் கலக்கும் சாக்கடையாக உருமாறிவிட்டது. 
அத்துடன் கழிவுநீர் வாய்க்காலில் கொசுக்கள்  உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டுக்கு வித்திடுகின்றன. இதனால், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதுமட்டுமன்றி, தேங்கி நிற்கும் சாக்கடைகளிலிருந்து விஷஜந்துக்கள் அருகில் உள்ள வீடுகளில் புகுந்து விடுவதால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால், திருத்தோணிபுரம் வாய்க்காலைத் தூர்வாரி, சுத்தப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com