அயோத்தி விவகாரம் தொடர்பான மனுக்களை முன்கூட்டியே விசாரணை நடத்த முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

அயோத்தி விவகாரம் தொடர்பான மனுக்களை முன்கூட்டியே விசாரணை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.


அயோத்தி விவகாரம் தொடர்பான மனுக்களை முன்கூட்டியே விசாரணை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான அலாகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளவர்களில் அகில பாரத ஹிந்து மகாசபையும் ஒன்றாகும்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே. கௌல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு அகில பாரத ஹிந்து மகாசபை சார்பில் மூத்த வழக்குரைஞர் வருண் குமார் சின்ஹா ஆஜராகி, அயோத்தி விவகாரம் தொடர்பான மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதேபோல், உத்தரப் பிரதேச மாநில அரசு, ராம்லாலா அமைப்பு ஆகியவை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி, அயோத்தி தொடர்பான மனுக்கள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அதை விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறியதாவது:
அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து விட்டோம். அந்த மனுக்கள் மீது ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும். ஆதலால் உங்களது கோரிக்கைகளை நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லாலா ஆகிய அமைப்புகள் சரிபாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த 1994ஆம் ஆண்டில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில், முஸ்லிம் மதத்தின் ஒரு அங்கமாக மசூதியை கருத முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு, அயோத்தி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது அண்மையில் விசாரணை நடைபெற்றபோது, இது சுட்டிக்காட்டப்பட்டது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது குறித்து, 5 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்த தீர்ப்புக்கும், அயோத்தி விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அயோத்தி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் உரிய நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com