தலைநகரில் சத் பூஜை கொண்டாட்டம்: இன்றும், நாளையும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

சத் பூஜை கொண்டாட்டத்தை ஒட்டி, தில்லியில் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களுக்கு வாகனப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக


சத் பூஜை கொண்டாட்டத்தை ஒட்டி, தில்லியில் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களுக்கு வாகனப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.
சூரியக் கடவுளை வழிபடும் சத் பூஜையை வட மாநிலங்களில் குறிப்பாக பிகார், உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் (பூர்வாஞ்சல்) சேர்ந்த மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவர். தில்லியில் இந்தமாநிலங்களின் மக்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து வரும் 6-ஆவது நாளில் சத் பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து நான்கு நாள்களுக்கு இப்பூஜை கொண்டாடப்படும். தில்லியில் சத் பூஜையை பூர்வாஞ்சல் மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். இதனால், யமுனை படித்துறைகளிலும், ஏரிகள் உள்ளிட்ட இதர நீர் நிலைகளிலும் பூஜையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நவம்பர் 13 மாலையில் இருந்து நவம்பர் 14 காலை வரை சத்பூஜை கொண்டாடப்படும்.
இப்பூஜையைக் கொண்டாடுவதற்காக தில்லி அரசும், மாநகராட்சிகளும் தேவையான ஏற்பாடுகளை நீர்நிலைப் பகுதிகளில் செய்துள்ளன.
இப்பூஜைகள் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய பூஜைகள் நடைபெறும் நாள்களான செவ்வாய், புதன்கிழமைகளில் வாகன நெரிசலையும், கூட்ட நெரிசலையும் ஒழுங்குபடுத்தும் வகையில் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக தில்லி காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் அலோக் குமார் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது:
முகர்பா சௌக் பகுதியில் இருந்து சந்த்கி ராம் அகாரா வரையிலான புற வட்டச் சாலை, வாஜிராபாத் பாலம், ஐஎஸ்பிடி கஷ்மீரி கேட் அருகே உள்ள சாலைகள், புஷ்தா ரோடு (கஜூரி/ சாஸ்திரி பார்க்), காலிந்தி குஞ்ச் பாலம்
உள்ளிட்ட சாலைகளில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு தினங்களிலும் வாகன ஓட்டிகள் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யமுனை நதியை ஒட்டியுள்ள முக்கிய படித்துறைகள், பலஸ்வா ஏரி, ஹைதர்பூர் கால்வாய் ஆகிய நீர் நிலைகளை ஒட்டியுள்ள சாலைகளில் வழக்கமான போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும். புது தில்லி ரயில் நிலையம், பழைய தில்லி ரயில் நிலையம், நிஜாமுதீன் ரயில் நிலையம் மற்றும் ஐ.எஸ்.பி.டி. ஆகியவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காது.
ஐடிஓ பாலத்தில் போக்குவரத்து நெரிசலைப் பொருத்து, டிரான்ஸ் யமுனா பகுதியில் இருந்து ஐடிஓ பகுதிக்கு வரும் வாகனங்கள் புஷ்தா சாலைக்கு திருப்பிவிடப்பட்டு, அங்கிருந்து கீதா காலனி பாலம் அல்லது நிஜாமுதீன் பாலத்திற்கு திருப்பிவிடப்படும்.
பொதுமக்கள் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க உதவிடும் வகையில் தில்லி மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை பொதுமக்கள்கட்டாயம் தவிர்க்க வேண்டும். தேவைக்கு ஏற்ப போக்குவரத்து போலீஸார் உரிய போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை செய்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com